யாத்திரிகர்களின் எண்ணிக்கை குறைந்ததால் வர்த்தக சமூகத்தினர் பாதிப்பு!
-மஸ்கெலியா நிருபர்-
சிவனொளிபாத மலைக்கு வரும் யாத்திரிகர்களின் எண்ணிக்கை குறைந்ததால், நல்லதண்ணி வர்த்தக சமூகத்தினர் பாதிக்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வருடம் சிவனொளிபாத மலை யாத்திரை காலம் தொடங்கி கிட்டத்தட்ட 03 மாதங்கள் கடந்து விட்டாலும், கடந்த வருடங்களை போல இந்த வருடம் எதிர்பார்த்த எண்ணிக்கையிலான யாத்திரிகர்கள் இல்லாததால் வருமானத்தை இழந்துள்ளதாக, சிவனொளிபாத மலைக்கு செல்லும் வழித்தடத்தில் உள்ள வர்த்தக சமூகத்தினர் தெரிவிக்கின்றனர்.
ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் பௌர்ணமி நாளில் தொடங்கும் சிவனொளிபாத மலை யாத்திரை காலம், அடுத்த வருடம் மே மாதம் வெசாக் பௌர்ணமி நாள் வரை 6 மாதங்களுக்கு தொடர்கிறது.
சிவனொளிபாத மலை யாத்திரை காலத்தில், மலைக்கு செல்லும் வழித்தடத்திலும், கிதுல்கல, களுகல, கினிகத்தேன, நோர்டன்பிரிட்ஜ், ஹட்டன், மஸ்கெலியா, மவுஸ்சாகலை மற்றும் நல்லதண்ணி ஆகிய நகரங்களில், சிவனொளிபாத மலைக்கு வரும் யாத்திரிகர்களை இலக்காகக் கொண்டு ஏராளமான தற்காலிக கடைகள் கட்டப்படுகின்றன.
யாத்திரிகர்களால் மேற்கொள்ளப்படும் தினசரி வர்த்தகத்தில் இருந்து கிடைக்கும் வருமானத்தில் இருந்து இந்த வணிக சமூகம் தனது வாழ்க்கையை நடத்துகிறது.
இந்நிலையில், டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவு காரணமாக இந்த வருடம் யாத்திரிகர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாகவும், மலையக ரயில் பாதையில் ஏற்பட்ட பேரழிவுகள் காரணமாக, ரயில் போக்குவரத்தில் ஏற்பட்ட கட்டுப்பாடுகள் யாத்திரிகர்களின் வருகையை கணிசமாக பாதித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
ஒவ்வொரு யாத்திரை காலத்திலும், அரசு மற்றும் தனியார் வங்கிகளில் கடன் வாங்கி வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர், இந்த வருடம் எதிர்பார்த்த வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் போனதால், இந்த முறை தங்கள் வங்கிக் கடன்களை செலுத்த முடியாமல் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக, வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
