மோசமான வானிலை காரணமாக திருப்பி அனுப்பப்பட்ட விமானங்கள்

கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்த பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு கடும் மழை மற்றும் மின்னலுடன் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வந்த இரண்டு விமானங்கள் மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்துள்ளார்.

அதன்படி, அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னிலிருந்து நேற்று இரவு 10.25 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-605 மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.

குறித்த விமானம் நேற்று இரவு 11.35 மணியளவில் மத்தள விமான நிலையத்தில் தரையிறங்கியது.

இந்த விமானத்தில் 297 பயணிகளும் 15 பணியாளர்களும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்சமயம் விமானத்தின் பயணிகள் மற்றும் ஊழியர்களை பஸ் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மாலைதீவின் மாலேயில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL-104 நேற்று இரவு 10.55 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

கட்டுநாயக்க விமான நிலையத்தைச் சூழவுள்ள மோசமான காலநிலை காரணமாக இந்த விமானம் இன்று அதிகாலை 12.02 மணியளவில் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், விமானத்தில் இருந்த பயணிகளும் விமான ஊழியர்களும் விமானத்திலிருந்து வெளியே எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

எனினும் அதன் பின்னர் சிறிது நேரத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை சூழவுள்ள காலநிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த விமானம் மீண்டும் மத்தள விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு இன்று அதிகாலை 01.51 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியது.