இணையவழி மோசடி கும்பல்களுக்கு கம்போடியா ஒருபோதும் பாதுகாப்பான இடமாக இருக்காது என அந்நாட்டு பிரதமர் ஹுன் மானெட் தெரிவித்துள்ளார்.
பினோம் பென்னில் இன்று ஆரம்பமான இணையவழி மோசடிகளைத் தடுப்பது தொடர்பான சர்வதேச மாநாட்டில் உரையாற்றிய அவர், சர்வதேச மோசடி கும்பல்கள் நாட்டின் முன்னேற்றத்தையும் 17 மில்லியனுக்கும் அதிகமான மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்க கம்போடியா அனுமதிக்காது எனக் கூறினார். மேலும், மோசடி கும்பல்களை எதிர்த்துப் போராடுவதற்கு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பையும், நிகழ்நேர உளவுத் தகவல் பரிமாற்றத்தையும் வலுப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
தெற்காசிய நாடுகளில் இணையவழி மோசடி மையங்களின் முக்கிய தளமாக கம்போடியா மாறியிருந்த நிலையில், கடந்த ஒரு வருடமாக அந்நாட்டு அதிகாரிகள் நூற்றுக்கணக்கான மோசடி மையங்களில் சோதனைகளை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கின்றனர். மனிதக் கடத்தலுக்கு உள்ளானவர்கள் இத்தகைய மையங்களில் தடுத்து வைக்கப்பட்டு, காதல் மோசடி, பொலிஸ் அதிகாரிகள் போல் நடித்து மோசடி செய்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேவேளை, பெரிய அளவிலான மோசடி மையங்கள் மூடப்பட்டதாக கம்போடிய அதிகாரிகள் தெரிவிக்கும் நிலையில், சில ஆய்வாளர்கள் அந்த நடவடிக்கைகள் குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ளனர். முக்கிய நபர்கள் மீது போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், குற்றக் கும்பல்கள் தங்களது நடவடிக்கைகளை சிறிய இடங்களுக்கு மாற்றி வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல்கள் தொடர்பான அலுவலகத்தின் பிரதிநிதி டெல்பின் ஷான்ஸ், கம்போடியாவின் சர்வதேச ஒத்துழைப்புக்கான முயற்சிகளை வரவேற்றதுடன், தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் மேலும் நடவடிக்கைகள் தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டில் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.









