
மூன்று ரயில்கள் தடம்புரண்டு பாரிய விபத்து : 237 பேர் உயிரிழப்பு!
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் பாலசோரில் மூன்று ரயில்கள் மோதி இடம்பெற்ற விபத்தில் 237 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 900 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
18க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது.
கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கிப் பயணித்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானாகா ரயில் நிலையம் அருகே நேற்றிரவு 7 மணியளவில் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கோரமண்டல் விரைவு ரயில் பெட்டிகள் அருகில் இருந்த தண்டவாளத்தில் சரிந்துள்ளன.
இதன்போது, பெங்களுரில் இருந்து கொல்கத்தா நோக்கிப் பயணித்த மற்றுமொரு ரயில் தடம்புரண்ட ரயில் பெட்டிகளுடன் மோதி விபத்துக்குள்ளானது.
அதேநேரம், சரக்கு ரயில் ஒன்றும் இந்த விபத்தில் சிக்கியுள்ளது.
இதனையடுத்து விபத்து நடந்த பகுதியில் இந்திய தேசிய பேரிடர் மீட்பு பணியினர் மற்றும் தீயணைப்பு படையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விபத்துக்குள்ளான பகுதிக்கு அருகில் வசிக்கும் உள்ளூர் நபர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காயமடைந்தவர்கள் நோயாளர் காவு வாகனங்கள் மற்றும் பேருந்துகள் மூலம் வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஒடிசாவில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், மாநிலம் முழுவதும் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும்இ முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி விபத்து தொடர்பில் தனது இரங்கல்களை தெரிவித்துள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்குரிய நிவாரணங்களை வழங்குமாறு ரயில் போக்குவரத்துத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தனது டுவிட்டரின் பதிவிட்டுள்ளார்.
