முன்னணி சிவில் அமைப்புக்கள் ஜனாதிபதியிடம் பல அம்சங்கள் அடங்கிய கோரிக்கை

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

இலங்கையில் செயல்பட்டு வரும் பல முன்னணி சிவில் அமைப்புக்கள் ஜனாதிபதியிடம் பல அம்சங்களை கோரிக்கைகளாக முன்வைத்துள்ளன.

இது விடயமாக நேற்று புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ள அந்த கூட்டு அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கீழே கையொப்பமிட்டுள்ள இலங்கையின் சிவில் சமூக உறுப்பினர்களான நாங்கள், தேர்தல் முடிவுகள் மற்றும் புதிய அரசாங்கத்தின் அரசியல் மாற்றத்தை நோக்கிய நடவடிக்கைகளை வரவேற்கும் இந்த அரசியல் மாற்றத்தை இந்த நாட்டின் முக்கியமான மைல்கற்களாக நாங்கள் பார்க்கின்றோம்.

அதேவேளையில் எதிர்நோக்கும் சவால்களுக்கு புதிய அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் எனவும் எதிர்பார்க்கின்றோம்.

தேர்தலும் பதவி மாற்றமும் அமைதியாகவும் சுமுகமாகவும் நடைபெற்றமையை இட்டு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.

நாடு இப்போது பாராளுமன்றத் தேர்தலுக்கு தயாராகி வருகிறது, இந்த நேர்மறையானபோக்கு தொடரும் என்று நாங்கள் நம்புகிறோம். நாட்டை ஜனநாயகப்படுத்தவும், ஊழல் மற்றும் வீண்விரயத்தை வேரறுக்கவும், தமக்கு வாக்களிக்காதவர்கள் உட்பட அனைத்து மக்களுக்கும் ஜனாதிபதியாக இருக்க ஜனாதிபதி உறுதியளித்தார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதற்கான தனது உறுதிப்பாட்டை ஜனாதிபதி மேலும் வலியுறுத்தியுள்ளார்.

அரகலய மற்றும் இந்நாட்டு மக்களின் நீண்ட காலப் போராட்டங்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்ட ‘அமைப்பு மாற்றத்திற்கான’ மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு இப்போது எமக்குக் கிடைத்துள்ளது.

முதலில் “இலங்கை நம் தாய் நாடு” என்று அனைவரும் உரிமை கோரக்கூடிய ஒரு நாட்டை உருவாக்குமாறு கோருகிறோம்.

ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை மேலும் முன்னேற்றுவதற்கான கட்டமைப்பு சீர்திருத்தங்களை நிவர்த்தி செய்வதற்கும், பொருளாதார மற்றும் சமூக ரீதியில் பின்தங்கிய சமூகங்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான விசேட செயற்பாடுகளுக்காகவும் அரசாங்கம் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தும் என நம்புகிறோம்.

அனைவருக்கும் நீதியை உறுதிசெய்ய வேண்டும்.நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்து அதிகாரப் பகிர்வை நிறுவும் புதிய அரசியலமைப்பை நடைமுறைப்படுத்த வேண்டும்.
விளிம்பு நிலைக் கட்டமைப்பு, பொருளாதார அடக்குமுறை, சமூக மற்றும் பொருளாதார உரிமைகளை முன்னேற்றுவதற்கான வழிமுறைகள் மற்றும், அனைத்து சமூகங்களுக்கும் இடையே நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கான வழிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும்.

பொது ஒழுங்கைப் பேணுவதற்கும் பொலிஸ் அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கும் இராணுவத்தை அழைக்கும் வர்த்தமானி அறிவித்தலை ரத்துச் செய்யுமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்துகிறோம்.

போர்க்கால அட்டூழியங்கள், கடுமையான பிற குற்றங்கள் மற்றும் உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறல் மற்றும் இழப்பீடுகளை சிவில் சமூகம் தொடர்ந்து கோருகிறதுநல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஐநா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை இரண்டு வருடங்களுக்கு நீடிப்பதற்கு ஆதரவளிக்குமாறு ஜனாதிபதியை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

கடந்த தேர்தலில் வாக்களிக்கத் தகுதியுள்ள கைதிகள் வாக்களிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்த எந்த ஒரு வழிமுறையும் ஏற்படுத்தப்படவில்லை. வெளிநாட்டில் குடியேறியவர்கள், வெளிநாட்டில் பணிபுரிபவர்கள் உட்பட பலரால் வாக்களிக்க முடியவில்லை. இதனையும் கருத்திற் கொள்ளுமாறு வேண்டுகிறோம்.