அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரொட்ரிகஸை முதன்முறையாக சந்தித்துள்ளார். முன்னாள் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கப் படைகள் ஜனவரியில் கைது செய்த பின்னர், இரு தலைவர்களுக்கும் இடையிலான முதல் நேரடி சந்திப்பாக இது அமைந்துள்ளது.
நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடருக்கு இணையாக, ட்ரம்ப் ஏற்பாடு செய்திருந்த வரவேற்பு நிகழ்வில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இது முறையான இருதரப்பு சந்திப்பாக அல்லாமல், குறுகிய நேரத்திற்கான தனிப்பட்ட கலந்துரையாடலாக இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளும் சந்திப்பில் பங்கேற்றனர்.
மதுரோவின் கீழ் துணை ஜனாதிபதியாக பணியாற்றிய ரொட்ரிகஸ், மதுரோ கைது செய்யப்பட்ட பின்னர் வெனிசுலாவின் இடைக்கால தலைவராக பொறுப்பேற்றார். எரிசக்தி, சுரங்கம், பாதுகாப்பு மற்றும் கடன் உள்ளிட்ட துறைகளில் அமெரிக்காவுடனான உறவுகளை முன்னெடுப்பதில் அவரது நிர்வாகம் கவனம் செலுத்தி வருகிறது.
சமீபத்தில் அமெரிக்கா மற்றும் வெனிசுலா இடையே எரிசக்தி தொடர்பான ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. வெனிசுலாவின் எண்ணெய்த் துறையில் அமெரிக்க முதலீட்டை அதிகரிப்பது மற்றும் அந்நாட்டின் எரிசக்தித் துறையை மீளமைப்பது தொடர்பாக இரு தரப்பும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.
இதனிடையே, ரொட்ரிகஸுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்துவதை எதிர்த்து நியூயோர்க்கில் வெனிசுலா எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் வெனிசுலாவில் சுதந்திரமான தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.









