முச்சக்கரவண்டி மரத்தில் மோதி விபத்து: சாரதி பலி

– திருகோணமலை நிருபர் –

திருகோணமலை வெருகல் பூநகர் பகுதியில் இன்றையதினம் ஞாயிற்று கிழமை அதிகாலை 4 மணியளவில் முச்சக்கரவண்டியொன்று வீதியோரத்தில் நின்ற மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

இதன்போது முச்சக்கரவண்டியை செலுத்தி வந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான தியாகராசா ஜெயச்சந்திரன் (வயது – 41) சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

வெருகல் முருகன் ஆலயத்திற்கு சவாரி ஏற்றி சென்று வீடு திரும்புகையில் நித்திரைத் தூக்கம் காரணமாக முச்சக்கரவண்டி பூநகர் பகுதியில் வைத்து வீதியோரத்தில் நின்ற மரம் ஒன்றில் மோதியதுடன் முச்சக்கர வண்டியின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைகளுக்காக கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன் குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.