ஃபெண்டனில் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் இரசாயன மூலப்பொருட்களை சீனாவிலிருந்து மெக்சிகோ மற்றும் அமெரிக்காவுக்கு கடத்தும் வலையமைப்பை ஒருங்கிணைத்து நிதியளித்ததாகக் கூறப்படும் முக்கிய போதைப்பொருள் கடத்தல் சந்தேகநபர் ஒருவர் மெக்சிகோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
‘டொன் ஃபிளாகோ’ (Don Flaco) என அழைக்கப்படும் ஜோசே ஏஞ்சல் ரிவேரா, மெக்சிகோ நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டு நடவடிக்கையில் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் ஓமர் கார்சியா ஹர்ஃபுச் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையில் அமெரிக்காவின் FBI மற்றும் போதைப்பொருள் தடுப்பு நிர்வாகம் (DEA) ஆகியவையும் இணைந்து செயற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரிவேரா, அமெரிக்காவுக்குள் ஃபெண்டனில் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், 2023 ஜனவரியில் அமெரிக்க வெளியுறவுத்துறையால் தடைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். எனினும், அவர் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட வேண்டியுள்ளன.
சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் இரு நாடுகளின் கூட்டு நடவடிக்கைகள் மூலம் போதைப்பொருள் குற்றக் கும்பல்களுக்கு நிதியளிக்கும் பணப்புழக்கத்தைத் துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மெக்சிகோ பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், மெக்சிகோவை போதைப்பொருள் கும்பல் வன்முறையின் முக்கிய மையமாகக் குறிப்பிட்டிருந்தார். மெக்சிகோ தனது பிரதேசத்தின் கட்டுப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.









