-மன்னார் நிருபர்-
மன்னார் செளத்பார் பகுதியில் மீன் பிடிப்பதற்காக வலை பாய்ச்ச சென்ற மீனவர் ஒருவர், எதிர்பாராத விதமாக மன்னார் புகையிரத பாலத்திற்கு அருகாமையில் உள்ள பள்ளத்தில் விழுந்து காணாமல் போன நிலையில் இன்று சனிக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் மன்னார் எமில் நகர் பகுதியை சேர்ந்த இளம் குடும்பஸ்தரான கிரிஸ்தோபர் ஜாக்லின் (வயது 29) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை மதியம் கடலுக்குள் விழுந்த நிலையில் உள்ளூர் மீனவர்கள் மற்றும் கடற்படையினர் இணைந்து குறித்த நபரை தேடும் பணியில் ஈடுபட்டனர் .
இருப்பினும், குறித்த நபர் மீட்கப்படாத நிலையில் இன்று சனிக்கிழமை காலை தொழிலுக்குச் சென்ற மீனவர்களினால் குறித்த மீனவர் சடலமாக மீட்கப்பட்டார்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் பொலிஸார் மரணம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பின்னர் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.