மின்சார சபை ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
குருநாகல் பகுதியில் நேற்று புதன்கிழமை தடைப்பட்டிருந்த மின்சாரத்தை மீட்டெடுக்கும் போது உயிரிழந்த அனுருத்த குமாரவுக்கு (வயது-41) இலங்கை மின்சார வாரியம் தமது அஞ்சலி செலுத்தியுள்ளது.
2007 ஆம் ஆண்டு தம்புள்ளையில் தற்காலிக மின்கம்பி பராமரிப்பாளராக (லைன்ஸ்மேன்) தனது வாழ்க்கையைத் தொடங்கிய குமார, ஒரு தசாப்த காலம் பணியாற்றிய பின்னர் 2017 ஆம் ஆண்டு நிரந்தர ஊழியரானார். பின்னர் அவர் உக்குவெல துணை மின்நிலையத்திற்கு மாற்றப்பட்டார், சமீபகாலமாக ஹெட்டிபொல மின் நிலையத்தில் பணியாற்றினார். இங்கு நியமிக்கப்பட்டதிலிருந்து ஒரு தொழிநுட்ப உத்தியோகஸ்தராக தனது கடமைகளை சிறப்பாகச் செய்து வந்துள்ளார்.
போவத்த-வீரபோகுன பாதையில் நேற்று புதன்கிழமை நண்பகல் 12.45 மணியளவில் சேதமடைந்த குறைந்த மின்னழுத்த மின் கம்பியை சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது , மின்சார தாக்குதலுக்கு இலக்காகி அவருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டன.
மின்சார தாக்குதலுக்கு இலக்கான இவர் வீரபோகுன ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் பின்னர் குளியாபிட்டிய போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இரண்டு மருத்துவமனைகளிலும் உள்ள மருத்துவக் குழுக்கள் அவரைக் காப்பாற்ற முழு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் உயிரிழந்துள்ளதாக, வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய அவசரநிலையின் போது அவரது சேவைக்கு வணக்கம் செலுத்திய இ.மி.ச அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்ததுடன், உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு அனைத்து ஆதரவையும் வழங்குவதாகக் உறுதியளித்துள்ளது.
