-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட மீன் சந்தையின் மின்சாரம் நேற்று செவ்வாய்க்கிழமை துண்டிக்கப்பட்டதால் மீன் வியாபாரிகள் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கினர்.
மாநகர சபையினர் மின்சார சபைக்கு மின்சார கட்டணத்தை செலுத்த தவறியதால் நேற்று மதியம் மீன் சந்தையின் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதனால் மீனவர்கள் தமது மீன்களை விற்பனை செய்வதில் சிரமத்தை எதிர்நோக்கினர்.
இரவு மீன்களை விற்பனை செய்ய முடியாமல், இலக்கமுறை நிறுவை தராசுகள் பயன்படுத்த முடியாமல், மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ச்சி சந்தையை கழுவ முடியாமல் மீன் வியாபாரிகள் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கினர்.
இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனின் கவனத்துக்கு கொண்டு சென்ற நிலையில் குறித்த இடத்திற்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் மின்சார சபையினருடன் தொடர்புகொண்டு மின்சார இணைப்பை மீளவும் பெற்றுக் கொடுத்தார்.
யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு நல்லூர் திருவிழாவில் அமைக்கப்பட்ட கடைகள் உட்பட பல்வேறு வகையிலும் வருமானம் கிடைத்தும் மாநகர சபையானது சந்தையின் அடிப்படை வசதிகளை சீர் செய்வதிலும், மின்சார கட்டணத்தை செலுத்துவதிலும் தவறிழைத்துள்ளதாக மீனவர்கள் குற்றம்சாட்டினர்.