
மாவிலாறு அணைக்கட்டை மீளக் கட்டியெழுப்பும் ஆரம்பம் நிகழ்வு
அண்மைக் காலத்தில் ஏற்பட்ட “தித்வா” சூறாவளியின் தாக்கத்தால் மாவிலாறு அணைக்கட்டு பகுதியில் கடுமையான சேதம் ஏற்பட்டது.
இதன் காரணமாக மாவிலாறு அண்மித்த பகுதிகள் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கின.
இந்த வெள்ளப் பேரழிவால் பொதுமக்கள் பல்வேறு இழப்புகளைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது, வீடுகள், விவசாய நிலங்கள் மற்றும் வாழ்வாதார வசதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்நிலையைத் தொடர்ந்து, தித்வா சூறாவளியால் மாவிலாறு அணைக்கட்டில் ஏற்பட்ட சேதங்களைச் சீரமைத்து, அல்லை–மாவிலாறு விவசாயத் திட்டத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் தொடக்க விழாவும் அடிக்கல் நாட்டும் நிகழ்வும் இன்று வெள்ளிக்கிழமை அல்லை–மாவிலாறு பகுதியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சருமான கே.டி. லால்காந்த கலந்து கொண்டு திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இத்திட்டத்திற்காக சுமார் 500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதன் மூலம் விவசாய நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய வெள்ளப் பாதிப்புகளிலிருந்து அல்லை–மாவிலாறு அண்மித்த பகுதிகளை பாதுகாப்பதற்கும் வழிவகுக்கும் என நம்பப்படுகிறது.
இந்நிகழ்வில் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த, கமத்தொழில், பிரதி அமைச்சர் திரு.அரவிந்த செனரத் விதாரண ந, பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன், தேசிய மக்கள் சக்தியின் மூதூர் அமைப்பாளர் சப்றான், தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள், பொதுமக்கள், புத்திஜீவிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
