இங்கிலாந்தின் மான்செஸ்டர் பகுதியில் உள்ள யூத சமூகத்தை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பயங்கரவாதத் தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீண்டகாலமாக முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பயங்கரவாத எதிர்ப்புப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக 30 வயதுகளில் உள்ள இரு ஆண்கள் செப்டம்பர் 20ஆம் திகதி மான்செஸ்டர் நகரில் கைது செய்யப்பட்டுள்ளனர். பயங்கரவாதச் சட்டத்தின் 41ஆவது பிரிவின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக லண்டனில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இருவரையும் செப்டம்பர் 27ஆம் திகதி வரை காவலில் வைத்திருக்க நீதிமன்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
லிவர்பூல் மற்றும் சால்ஃபோர்ட் பகுதிகளில் உள்ள சில இடங்களிலும் பொலிஸார் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக பொதுமக்களுக்கு தற்போது தொடர்ச்சியான அச்சுறுத்தல் எதுவும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
யூத சமூகத்தின் முக்கியமான புனித நாளான யோம் கிப்பூர் காலப்பகுதியில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இதனால் சமூகத்தினரிடையே கூடுதல் கவலை ஏற்பட்டுள்ளதை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டுள்ளதுடன், யூத சமூகங்கள் வசிக்கும் பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் பொலிஸ் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.









