இத்தாலியில் பிரபலமான மாஃபியா கொலை வழக்கில் தனது தாயைக் கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட சொந்த தந்தைக்கு எதிராக சாட்சியமளித்த டெனிஸ் கோஸ்கோ உயிரிழந்துள்ளார். 35 வயதான அவர் ஞாயிற்றுக்கிழமை ரோம் நகரில் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது மரணம் தற்கொலையாக இருக்கலாம் என நம்பப்படும் நிலையில், அது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
அவரது தாயான லியா கரோஃபாலோ, 2009ஆம் ஆண்டு தெற்கு இத்தாலியின் ‘என்டிராங்கெட்டா(Ndrangheta) மாஃபியா அமைப்புக்கு எதிராக அரசுத் தரப்பு சாட்சியாக மாறிய பின்னர் கொலை செய்யப்பட்டார். கரோஃபாலோவின் கொலை, மாஃபியாவுக்கு எதிரான எதிர்ப்பின் முக்கிய அடையாளமாக மாறியது. அவரது கணவர் கார்லோ கோஸ்கோ அவரை ஏமாற்றி ஒரு சந்திப்புக்கு வரவழைத்து, கழுத்தை நெரித்து கொலை செய்த பின்னர் உடலை துண்டு துண்டாக வெட்டி எரித்ததாக விசாரணையில் தெரியவந்தது.
பல ஆண்டுகளுக்குப் பின்னர், கொலையில் ஈடுபட்ட ஒருவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் எலும்புத் துண்டுகளும் ஒரு கழுத்தணியும் மீட்கப்பட்டன. அவற்றை டெனிஸ் தனது தாயுடையவை என அடையாளம் கண்டார். 2013ஆம் ஆண்டு நடைபெற்ற தாயின் பொது இறுதிச் சடங்கில் அவர், நீதிக்காக தனது உயிரையே ஆபத்தில் வைத்த தாயின் துணிச்சலைப் பற்றி உருக்கமாகப் பேசினார்.
தந்தைக்கு எதிரான வழக்கில் சாட்சியமளித்த டெனிஸ், தன்னை “நீதிக்காக பெருமையுடன் சாட்சியமளிப்பவர்” எனக் குறிப்பிட்டிருந்தார். தாயின் கொலை தொடர்பாக உண்மையை வெளிப்படுத்தியதன் மூலம் தனது வாழ்க்கையை மீண்டும் தொடங்குவதற்கான “உள்ளார்ந்த சுதந்திரத்தை” பெற விரும்பியதாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். அவரது தந்தையும் மேலும் மூன்று குற்றவாளிகளும் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
தாயைப் போலவே டெனிஸும் பல ஆண்டுகளாக அரசுப் பாதுகாப்பின் கீழ் புதிய பெயர் மற்றும் அடையாளத்துடன் வாழ்ந்து வந்தார். எனினும், நண்பர்களின் கூற்றுப்படி, அவர் மனநலப் பிரச்சினைகள் மற்றும் போதைப்பொருள் பழக்கத்துடன் போராடி வந்தார். சிறையில் இருந்த தனது தந்தையுடனும் சமீபத்திய ஆண்டுகளில் மீண்டும் தொடர்பை ஏற்படுத்தியிருந்தார். அனைத்தையும் மீறியும் தனது வாழ்க்கையில் ஒரு “வெற்றிடம்” இருப்பதாக அவர் உணர்ந்ததாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
மாஃபியாவை எதிர்த்து அமைப்புசார்ந்த குற்றச்செயல்களிலிருந்து விலகுபவர்களுக்கு நீண்டகால ஆதரவு தேவை என்பதை டெனிஸின் மரணம் எடுத்துக்காட்டுவதாக இத்தாலிய எதிர்-மாஃபியா அமைப்பான Libera தெரிவித்துள்ளது. குறிப்பாக குடும்ப உறவுகளை அடிப்படையாகக் கொண்ட மாஃபியா அமைப்புகளில் இருந்து விலகுவது, உடல் ரீதியான பாதுகாப்பைத் தாண்டி ஆழமான உளவியல் போராட்டத்தையும் ஏற்படுத்தக்கூடும் என அதன் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
டெனிஸின் மரணம் தொடர்பாக, அவரை தற்கொலைக்கு தூண்டியதாக யாரேனும் செயல்பட்டார்களா என்பதை கண்டறிய அரசுத் தரப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளது. அவரது தொலைபேசியும் தடயவியல் ஆய்வுக்காக கைப்பற்றப்பட்டுள்ளது.
டெனிஸின் வாழ்க்கை “தைரியத்துக்கும் துன்பத்துக்கும் இடையிலான போராட்டம்” என Libera அமைப்பின் தலைவர் லுய்ஜி சியோட்டி வர்ணித்துள்ளார். தாய்க்காக நீதியைத் தேடிய அவரது துணிச்சலான பயணம், இறுதியில் அவரை வாழ்நாள் முழுவதும் தொடர்ந்த ஆழமான வலியுடனும் முடிவடைந்துள்ளது.











