
மஸ்கெலியாவில் ஐயப்ப மண்டல பூர்த்தி விழா
-மஸ்கெலியா நிருபர்-
மஸ்கெலியா ஸ்ரீ சண்முகநாத சுவாமி தேவஸ்தானத்தின் 32 ஆவது வருட ஐயப்ப மண்டல பூர்த்தி விழா நடைபெற்றது.
வாலாற்றுச் சிறப்புமிக்க மஸ்கெலியா ஸ்ரீ சண்முகநாத சுவாமி தேவஸ்தானத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ ஐயப்ப சுவாமிக்கு 32 ஆவது வருட மண்டல பூர்த்தி விழா ஸ்ரீ ஐயப்ப யாத்திரீர்கள் நடாத்தும் மகா சக்தி பூஜை பெருவிழா
நேற்று சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றிருந்தது.
நிகழும் குரோதி வருடம் மார்கழித் திங்கள் 12ம் நாள் நேற்று சனிக்கிழமை காலை 8.00 மணிமுதல் சபரிமலை ஸ்ரீ பம்பா கணபதியை நினைவு கூறும் வகையில் குழந்தையுள்ளம் கொண்ட அன்னதான பிரபுவுக்கு சக்தி பூஜை பெருவிழா, அன்னதானம் என்பன வெகு விமர்சையாக நடைபெற்றது.
காலை 10.00 மணிக்கு விநாயகப் பெருமானுக்கு விஷேட திரவிய அபிஷேகம் இடம்பெற்று தொடர்ந்து ஐயப்ப சுவாமிக்கு விஷேட அபிஷேகத்துடன் யாத்திரை மேற்கொள்ளவிருக்கும் சுவாமிகள் நடாத்தும் விஷேட பஜனையும், சக்தி பூஜையின் 18ம் படி பூஜையும் நிறைவடைந்தப் பின்னர் அடியார்களுக்கு அன்னதானம் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த மண்டல பூர்த்தி பூஜை வழிபாட்டு நிகழ்வில், மஸ்கெலியாவின் மூத்த குருசுவாமி செல்வக்குமார் சுவாமி மற்றும் குருசுவாமிகளான சந்திரசேகரன், சந்திரகுமார், சக்தி, சண்முகா சுவாமி உட்பட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பெருந்திரளானோர் பூஜையை சிறப்பித்திருந்தார்கள்.


