மறைந்த ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் நினைவு தினம்!

-மட்டக்களப்பு நிருபர்-

மட்டக்களப்பு மாவட்டத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு. ஊடக அமையம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் இனந்தெரியாதோரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 14 ஆவது நினைவு தினம் இன்று புதன்கிழமை  மட்டக்களப்பு காந்திப் பூங்கா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் இடம்பெற்றது.

இந்நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு. ஊடக அமையம்,  மட்டக்களப்பு மாவட்ட தொழில்சார் ஊடகவியலாளர் சங்கம் ஆகியவற்றின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், அமரர் ஐயாத்துரை நடேசனின் உருவப் படத்திற்கு சிரேஷ்ட ஊடகவியலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேத்திரன், சிவில் சமூக செயற்பாட்டாளர் வணபிதா எஸ்.ஜெகதாஸ் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் இரா.துரைரத்தினம் ஆகியோர் மலர்மாலை அணிவித்ததனர்.

அத்தோடு நிகழ்வில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள் மற்றும் பிரமுகர்களால் அகல் விளக்கேற்றப்பட்டுஇ மலர் தூபி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக ஒன்றியத் தலைவர் எஸ்.சிவயோகநாதன் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள், பொது அமைப்புக்களின் பிரமுகர்கள், மதத் தலைவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.