மத்திய ஆபிரிக்கக் குடியரசைச் சேர்ந்த முன்னாள் Seleka போராளிக் குழுத் தளபதி மஹமத் சயீத் அப்தெல் காணி, மனிதகுலத்திற்கு எதிரான குற்றமாகக் கருதப்படும் சித்திரவதை உள்ளிட்ட குற்றங்களில் குற்றவாளி என சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) தீர்ப்பளித்துள்ளது.
2013ஆம் ஆண்டு மத்திய ஆபிரிக்கக் குடியரசில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்த காலத்தில், தலைநகர் பாங்குயில் உள்ள Office Central de Répression du Banditisme (OCRB) தடுப்பு நிலையத்தை சயீத் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக வழக்குத் தொடரப்பட்டது. அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி François Bozizé-யின் ஆதரவாளர்கள் உள்ளிட்ட கைதிகள் சித்திரவதை மற்றும் மனிதாபிமானமற்ற நடத்தைக்கு உள்ளாக்கப்பட்டதாக வழக்குத் தரப்பு குற்றம் சுமத்தியிருந்தது.
சயீத் மீது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக ஏழு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. 2022 செப்டெம்பர் மாதம் ஆரம்பமான இந்த விசாரணையில் 130க்கும் மேற்பட்ட நீதிமன்ற அமர்வுகள் இடம்பெற்றதுடன், வழக்குத் தரப்பு 58 சாட்சிகளையும் பாதுகாப்புத் தரப்பு 3 சாட்சிகளையும் ஆஜர்படுத்தியது. 32 பாதிக்கப்பட்டவர்கள் வழக்கில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
சயீத் 2019ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, 2021ஆம் ஆண்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டார். இந்நிலையில், தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய இரு தரப்பினருக்கும் வாய்ப்பு உள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.









