மத்திய அஞ்சல் பரிமாற்ற நிலையத்திற்கு முன்பாக அஞ்சல் தொழிற்சங்கங்கள் சத்தியாக்கிரக போராட்டம்

தற்போது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அஞ்சல் தொழிற்சங்கங்கள் கொழும்பில் உள்ள மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்திற்கு  முன்பாக சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.

இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் தொழிலாளர் போராட்ட மையம் உட்பட பல தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டத்தில் இணைந்துள்ளனர்.

போராட்டம் காரணமாக, இன்று காலை முதல் மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தை சுற்றி சிறப்பு பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அஞ்சல் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு இன்று 5ஆவது நாளாகத் தொடரும் நிலையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அஞ்சல் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு இன்றும் தொடரும் என்று கூட்டு அஞ்சல் தொழிற்சங்க முன்னணியின் இணை ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.

பணிக்கு சமூகமளிக்காத அனைத்து அஞ்சல் ஊழியர்களும் தங்கள் பதவிகளை விட்டு வெளியேறியது போல் கருதப்படுவார்கள் என்று அஞ்சல் மா அதிபர் ருவன் சத்குமார அறிக்கை வெளியிட்ட பின்னணியில் இந்த பதற்றமான சூழ்நிலை வந்துள்ளது.

இந்த மாதம் 17 ஆம் திகதி முதல் அனைத்து அஞ்சல் ஊழியர்களின் விடுமுறை செல்லுபடியாகாது என்பதால், முறையான விடுப்பு ஒப்புதல் இல்லாமல் பணிக்கு சமூகமளிக்காத ஊழியர்களின் சம்பளத்தை வழங்க நிதி விடுவிக்கப்படாது என்று திறைசேரி தெரிவித்துள்ளதாகவும் அஞ்சல் மா அதிபர் தெரிவித்தார்.

தற்போது தேங்கி நிற்கும் கடிதங்கள் மற்றும் பொதிகளை விநியோகிக்க பாதுகாப்புப் பிரிவிற்குச் சொந்தமான வாகனங்களை வழங்குமாறு பாதுகாப்பு அமைச்சகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அஞ்சல் மா அதிபர் தெரிவித்தார்.