
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை மண் கடத்தலில் ஈடுபட்ட டிப்பர் சாரதி தப்பி சென்றுள்ளதுடன் குறித்த டிப்பர் வண்டியை துரத்தி வந்த இளைஞர்களில் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நுணாவில் பகுதியில் இருந்து சாவகச்சேரி நோக்கி அதிகாலை 2 மணியளவில் வந்து கொண்டிருந்த டிப்பர் வாகனத்தை போக்குவரத்து கடமையில் இருந்த சாவகச்சேரி பொலிசார் மறித்துள்ளனர்.
எனினும் குறித்த டிப்பர் நிறுத்தாமல் சென்றதையடுத்து டிப்பர் வாகனத்தை துரத்திச் சென்ற பொலிசார் சாவகச்சேரி சுற்றுவட்டத்தில் வைத்து அதனை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதன்போது டிப்பர் சாரதி தப்பிச் சென்றுள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தமது ஊரில் மண் கடத்தல் இடம்பெறுவதை அறிந்த நுணாவில் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மூவர் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் டிப்பரை துரத்தி வந்துள்ளனர். இதன்போது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த அந்த ஊர் இளைஞன் அங்கிருந்து சென்ற நிலையில் மற்றைய மோட்டார் சைக்கிள் சாரதி மதுபோதையில் இருந்ததால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவருடன் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்தவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
டிப்பர் சாரதியை கைது செய்வதற்காக மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
