மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபை அமர்விலிருந்து 9 உறுப்பினர்கள் வெளிநடப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் முண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் இரண்டாவது சபை அமர்வு, இன்று செவ்வாய்கிழமை களுதாவளையில் அமைந்துள் பிரதேச சபையின் சபா மண்டபத்தில், பிரதேச சபைத் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, பிரதேச சபையில் அங்கத்துவம் வகிக்கும் அரசியற் கட்சிகளைச் சேர்ந்த 20 உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது தலைமை உரையாற்றிய தவிசாளர் வினோராஜ்,

தான் பிரதேச சபை தவிசாளராக பொறுப்பேற்றத்திலிருந்து, தற்போது வரையில் மேற்கொண்டுள்ள வேலைகள் தொடர்பிலும், அபிவித்தித் திட்டங்கள் தொடர்பிலும், ஆலயங்கள், தனியார் கல்வி நிலையங்கள் போன்ற பொது அமைப்புக்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடல்கள் தொடர்பிலும் விபரித்தார்.

இந்நிலையில், தவிசாளரினால் முன்வைக்கப்படும் கருத்துக்களை தாம் முற்று முழுதாக ஏற்க முடியாது எனவும், நிகழ்ச்சி நிரலில் கொண்டு வரப்பட்ட விடயங்களுக்கு அப்பால் சென்று கூட்டத்தை தொடர்வதாகவும், செம்மணிப் படுகொலை விடயத்தை ஒரு பிரேரணையாகக் கொண்டு வருமாறும், தமக்கு சபையில் கருத்துச் சொல்லும் உரிமை மறுக்கப்படுவதாகவும் தெரிவித்து, சபையிலிருந்த எதிர் தரப்பு உறுப்பினர்கள் 9 பேர் வெளியேறினர்.

அதில், தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் 6 பேரும், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, சுயேட்சைக்குழு ஆகியவற்றிலிருந்து தலா ஒவ்வொரு உறுப்பினர் அடங்கலாக 3 பேரும் மொத்தம் 9 பேர் சபையிலிருந்து வெளியேற்றினர்.

தொடர்ந்து இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் 9 பேரும், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் தலா ஒவ்வொருவர் அடங்கலாக இருவரும், மொத்தம் 11 பேருடன் தொடர்ந்து சபை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.