மண்சரிவு அபாயம் – பதுளையில் 238 குடும்பங்கள் வெளியேற்றம்

மண்சரிவு அபாயம் காரணமாக பதுளை மாவட்டத்தில் 238 குடும்பங்களைச் சேர்ந்த 806 பேர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் அதிக மழை பெய்து வருவதால், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகத்தின் ஆலோசனைக்கு அமைய மக்கள் வெளியேற்றப்பட்டதாக பதுளை மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணிகள் நேற்று (10) மேற்கொள்ளப்பட்டதாகவும் பதுளை மாவட்ட செயலாளர் குறிப்பிட்டுள்ளார் .

பதுளையில் உள்ள 15 பிரதேச செயலகப் பிரிவுகளில், சுமார் 14 பிரிவுகள் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் முன்னர் பாதிக்கப்படாமல் இருந்த ரிதீமாலியத்த பிரிவும் இப்போது பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பதுளை மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

“களுகேலே மலையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, 50 குடும்பங்களைச் சேர்ந்த 129 பேர் பாதுகாப்பான மையங்களுக்கு மாற்றப்பட்டனர். சொரணத்தொட்ட பிரிவில், 60 குடும்பங்களைச் சேர்ந்த 157 பேர்; ஊவா பரணகமவில், 40 குடும்பங்களைச் சேர்ந்த 127 பேர்; ரிதீமாலியத்தவில், 50 குடும்பங்களைச் சேர்ந்த 139 பேர்; மற்றும் மீகஹகிவுலவில், மண்சரிவு அச்சுறுத்தல்கள் காரணமாக 35 குடும்பங்களைச் சேர்ந்த 158 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேநேரம் ஹாலி-எல பிரதேச செயலகப் பகுதியில், 18 குடும்பங்களைச் சேர்ந்த 87 பேரும், எல்லவில், 34 குடும்பங்களைச் சேர்ந்த 148 பேரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.