மட்டு.வந்தாறுமூலை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்த்தி திருச்சடங்கு உற்சவம்

-வாழைச்சேனை நிருபர்-

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான வந்தாறுமூலை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தின் திருக்குளிர்த்தி திருச்சடங்கு உற்சவம், நேற்று திங்கட்கிழமை மாலை பக்தர்களின் ஆரோகரா கோசத்துடனும், சிலம்பு ஒலியுடன் திருக்குளிர்த்தி ஆடல் வைபவத்துடன் நிறைவுபெற்றது.

கடந்த மாதம் 9 ஆம் திகதி அன்று திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி வந்தாறு மூலை 7 குடி மக்களின் பங்களிப்புடன் தொடர்ந்து 5 நாட்கள் திருச்சடங்கு நடைபெற்று நேற்று மாலை வைகாசி திங்கள் கிழமையன்று திருக்குளிர்த்தி வைபவத்துடன் திருச்சடங்கு இனிது நிறைவு பெற்றது.

சாடிப்பானை எடுத்து பக்கப்பானைகள் வைத்தலுடன் பொங்கல் வைபவம் இடம்பெற்றது.

அத்தோடு, உடுக்கு காவியம் பாடப்பட்டு தொடர்ந்து அம்பாளுக்கு விசேட பூசை இடம்பெற்று, அம்பாள் உள் வீதி வலம் வந்து பக்தர்கள் புடை சூழ வெளியில் உள்ள திருக்குளிர்த்தி பாடும் இடத்திற்கு சென்று, திருக்குளிர்த்தி பாடல் பாடப்பெற்று திருக்குளிர்த்தி வைபவம் நடைபெற்று அம்பாள் பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கி, மீண்டும் ஆலயத்திற்குள் சென்றதுடன் பூசை நிகழ்வுகள் யாவும்  நடைபெற்றது.

இவ்வருடம் வழக்கத்திற்கு மாறாக அடியார்கள் பசும்பாலில் பொங்கல் தயாரித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.

திருச்சடங்கானது, ஆலயத் தலைவர் சொ.தங்கராசாவின் தலைமையில் ஆலயகுரு கு.குணரெட்ணம் நடாத்தி வைத்தார்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவ் ஆலயத்தில் சிலம்பு ஓசை கேட்டமையால், சிலம்பின் ஒலியினை கேட்டமை அம்பாளின் அற்புத செயலாக கருதப்பட்டு, பிரதேச மக்கள் அம்பாளை போற்றி வணங்கி வருகின்றனர்.