மட்டு.மாவட்ட செயலகத்திற்கு முன்னால் நீண்ட நேரமாக காத்திருக்கும் ஊடகவியலாளர்கள்

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறுகின்றது.

இந்நிலையில் இந்நிகழ்வில் ஊடகக் கடமையில் ஈடுபடுவதற்காக அரச தகவல் திணைக்களத்தினால் 2023-2024 ஆம் ஆண்டிற்காக ஊடக அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படவுள்ளதாகவும் ஊடகவியலாளர்கள் இந்நிகழ்வுக்கு சமுகம் தரும்போது அவ்வழைப்பிதழ்களைக் கொண்டுவருவது அவசியம் எனவும் மாவட்ட ஊடகப்பிரிவின் தகவல் பொறுப்பதிகாரி இரண்டு நாட்களுக்கு முன் அறிவித்திருந்தார்.

வழமைக்கு மாறாக இவ்வாறான ஒரு அறிவித்தலை வெளியிட்டதையடுத்து ஊடகவியலாளர்கள் மாவட்ட ஊடகப்பிரிவின் தகவல் பொறுப்பதிகாரியை தொடர்புகொண்டு கேட்டபோது ‘மேலிடத்தின் உத்தரவின் பேரிலேயே இவ்வாறு ஒரு தகவலை தான் வெளியிட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து இன்று வியாழக்கிழமை காலை ஊடகவியலாளர்கள் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் கூடி நின்று தாங்கள் புறக்கணிக்கப்பட்டமைக்கு காரணம் கேட்டும் தாங்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுவதாக தெரிவித்தும் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது கூட்டத்திற்கு வருகை தந்த அபிவிருத்தி குழு தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் வெளியில் இருந்த ஊடகவியலாளரிடம் எதற்காக வெளியில் நிற்கிறீர்கள் என்று வினவியதுடன் தகவல் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட ஊடக அடையாள அட்டை இருந்தால் மாத்திரம் உள்ளே நுழையவும் என்றும் தெரிவித்து விட்டு சென்றுள்ளார்.

அதனைத்தொடர்ந்து அங்கு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ஜனா மற்றும் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் ஆகியோர் ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடியதுடன் இவ்விடயம் குறித்து தாங்கள் கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்தனர்.

இச்செயற்பாடானது ஊடகவியளாலர்களை அடக்கும் முகமாக 9 ஊடகவியளாளர்கள் பெயர்கள் மாத்திரம் பட்டியலிடப்பட்டு குறித்த 9 ஊடகவியளாளர்கள் மாத்திரம் அனுமதிக்கப்பட்டதுடன் ஏனைய ஊடகவியளாலர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

அத்துடன் கடந்த மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் போது ஊடகவியலாளர் ஒருவர் ஆளுநர் செந்தில் தொண்டமானை மிஸ்டர் கவர்னர் என விளித்து கேள்வி எழுப்பினார் அதன்போது அவர் ஆளுநரை அவ்வாறு அழைத்தது தவறு என தெரிவிக்கப்பட்டதுடன் அபிவிருத்தி குழு தலைவர் அனைத்து ஊடகவியலாளர்களையும் பார்த்து ஊடகவியலாளரை யார் உள்ளே நுழைய சொன்னது என கேட்டிருந்தார்.

இச்சம்பவத்தை அடிப்படையாக வைத்தே தாம் புறக்கணிக்கப்படுவதாகவும் ஒரு பதவியில் இருப்பவரை மிஸ்டர் என்று சொல்லி அவரது பதவியை சொல்லி மரியாதையின் நிமித்தம அழைப்பது இயல்பான ஒரு விடயம் எனவும் ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உலக நாடுகளில் பொதுவாகவே அந்தந்த நாட்டு ஜனாதிபதியை ஊடகவியலாளர்கள் மிஸ்டர் ப்ரஸிடன்ட் என அழைப்பதே வழக்கம். இவ்வாறிருக்க ஆளுநரை மிஸ்டர் கவர்னர் என அழைத்தது தவறு என தெரிவிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.