மட்டு.ஓட்டமாவடியில் அரச வங்கியில் நகைகள் களவு : வழக்கு விசாரணை இன்று
கிரான் நிருபர்
மட்டக்களப்பு ஓட்டமாவடியில் அரச வங்கியொன்றில் நகைகள் களவாடப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று வெள்ளிக்கிழமை வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது.
இதன்போது சந்தேக நபர்களை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மன்றில் நீதிபதி எம்.ஜ.எம்.றிஸ்வி முன்னிலையில் ஆஜர்படுத்தியிருந்தனர்.
சம்பவம் தொடர்பான சாட்சியங்கள் மற்றும் விடயங்களை குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் கேட்டறிந்து கொண்ட வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி சந்தேக நபர்கள் மூவரையும் தொடர் விசாரணைக்காக எதிர்வரும் 16.06.2023 வரை தடுப்புக் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
குறித்த வங்கியில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அங்கு கடமைபுரிந்த ஊழியர்கள் சிலரால் வங்கியில் இருந்த நகை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் 2 கோடி 7 இலட்சத்து 85,412.50 பெறுமதியான நகைகள் களவாடப்பட்டிருந்ததாகவும், இச் சம்பவம் வங்கி நிர்வாகத்திற்கு தெரிய வந்தமையினையிட்டு குறித்த வங்கியின் தலைமைச் செயலகத்தினால் சம்பவம் தொடர்பான மேலதிக நடவடிக்கைக்காக கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு முறைப்பாடு தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன் பிரகாரம் குற்றப் புலனாய்வு பிரிவினரின் விசாரணையின் பின்னர் 3 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்