மட்டு.சவுக்கடி கிராமத்தில் கிழக்கு பல்கலைகழகத்தின் ஏற்பாட்டில் மருத்துவ முகாம்

மட்டக்களப்பு சவுக்கடி கிராமத்தில் கிழக்கு பல்கலைகழகத்தின் ஏற்பாட்டில் மருத்துவ முகாம் இன்று செவ்வாய்கிழமை  நடை பெற்றது.

இக்கிராமத்தினை கிழக்குப் பல்கலைக்கழகம் பொறுப்பேற்று ஓர் மாதிரிக்கிரமமாக அபிவிருத்திசெய்ய திட்டமிட்டுள்ள நிலையில் அதன் முதல் கட்டமாக ஒன்றிணைந்த மருத்துவ முகாம் மற்றும் தொற்று நோய்கள் தொற்றா நோய்கள் தொடர்பான விழிப்புணர்வு இடம்பெற்றுள்ளது.

பல்கலைக்கழக சமூகம் மற்றும் தொழிற்றுறைகளை பல்கலைக்கழகத்தோடிணைக்கும் பிரிவின் ஒழுங்குபடுத்தலில் பிராந்திய சுகாதார வைத்திய பணிமனை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஆகியோரது ஒத்துழைப்புடன் நடைபெற்ற இம்முகாமை மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன், பிராந்திய சுகாதார வைத்திய பணிப்பாளர், ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர், ஏறாவூர் பிரதேச வைத்திய அதிகாரி ஆகியோர் ஒன்றிணைந்து ஆரம்பித்து வைத்துள்ளனர்.

மாவட்ட அரச அதிபர் கே.கருணாகரன், பிராந்திய சுகாதார வைத்திய பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணன், ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம், ஏறாவூர் பிரதேச வைத்திய அதிகாரி வைத்தியகலாநிதி ஸ்ரீநாத் ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவமுகாமை ஆரம்பித்து வைத்தனர்.

காலை 9 மணிமுதல் மருத்துவ முகாம் இடம்பெற்றதுடன், மாலை 3 மணிமுதல் கிராமத்தினுள் மருத்துவ கற்கை மாணவர்களினால் தொற்று நோய்கள் தொற்றா நோய்கள் மற்றும் சமூகம் சார்ந்த சுகாதார பழக்கவழக்கங்கள் தொடர்பான விழிப்புணர்வு கல்வி நிகழ்வும் இடம்பெற்றது.