மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய மட்ட மாணவர் பாராளுமன்ற இறுதி அமர்வு, குறிஞ்சாமுனை சக்தி வித்தியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மேற்கு கல்வி வலய நிர்வாகத்துறை பிரதி கல்வி பணிப்பாளர் தலைமையில் இந்நிகழ்வு சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக மேற்கு வலய கல்வி பணிப்பாளர் திருமதி சி.கங்கேஸ்வரன், பிரதி கல்வி பணிப்பாளர் திருமதி ரி.உதயாகரன், ஆசிரியர் கே.மகிநேந்திரன் மற்றும் வளவாளர்களான என்.நவநீதன், கே.சவுந்தரராஜன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர் பாராளுமன்ற அமர்வை முறைப்படி தொடங்கி வைத்தனர்.
வலயத்திற்குட்பட்ட பல்வேறு பாடசாலைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் இதில் கலந்துகொண்டு தமது ஆளுமையையும் வாதத்திறமைகளையும் வெளிப்படுத்தினர்.
நாட்டின் தேசிய பாராளுமன்ற மாதிரியிலேயே சபாநாயகர், பிரதமர், அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களாக மாணவர்கள் பொறுப்பேற்று அமர்வை திறம்பட வழிநடத்தினர்.
பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் எனப் பலரும் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டு மாணவர்களின் ஆற்றல்களை ஊக்கப்படுத்தினர்.









