மட்டக்களப்பு மண்முனை வாவியில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு மண்முனை வாவியில் இருந்து ஆணொருவரின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு-கோவில்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த, நான்கு பிள்ளைகளின் தந்தையான, கறுவல்தம்பி தங்கவேல் (வயது 49) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மண்முனை வாவியில் மீன் பிடிப்பதற்காக நேற்று வியாழக்கிழமை ஆற்றில் இறங்கிய குறித்த குடும்பஸ்தர், மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, ஆழமான பகுதிக்குள் தவறுதலாக சென்றதால் அதிலிருந்து மீளமுடியாமல் காணாமல் போயுள்ளார்.

இதனையடுத்து, காணாமல் போனவரை உறவினர்களும் பொதுமக்களும் பொலிஸாருடன் இணைந்து தேடிய நிலையில், அவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்துக்கு சென்ற திடீர் மரண விசாரணை அதிகாரி வடிவேல் மணிகரன் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டு, உடற்கூற்று பரிசோதனைக்காக சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தார்.

மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.