மட்டக்களப்பு சிங்கள மகா வித்தியாலயம் கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்துவைப்பு
-கிரான் நிருபர்-
30 வருடங்களின் பின் மீள் புனரமைக்கப்பட்ட மட்டக்களப்பு சிங்கள மகா வித்தியாலயம் (மும்மொழிப்பாடசாலை) இன்று வியாழக்கிழமை இன்று கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜகம்பத்தினால் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.
மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளர் திருமதி.சுஜாதா குலேந்திரகுமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு, பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜகம்பத் கலந்து சிறப்பித்ததுடன், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ.திசாநாயக்க கௌரவ அதிதியாகவும், கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எல்.பீ.மதனநாயக, கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் செல்வி.கனகசூரியம் அகிலா, மட்டக்களப்பு மக்கள் வங்கியின் பிராந்திய முகாமையாளர் ஈ.பீ.ஏ.சிசிர குமார உள்ளிட்டோர் சிறப்பு அதிதிகளாக கலந்து சிறப்பித்துள்ளனர்.
மட்டக்களப்பு கல்வி வலயத்தின் மண்முனை வடக்கு கோட்டத்திலுள்ள சிங்கள மகாவித்தியாலயம் கடந்த 30 வருடங்களாக நாட்டில் ஏற்பட்டிருந்த அசாதாரன சூழ்நிலை காரணமாக கடந்த 1990 ஆண்டு முதல் பூட்டப்பட்டிருந்த நிலையில், தற்போதய கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா ஜகம்பத் முயற்சியினால் மீள் புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
1954 ஆம் ஆண்டளவில் சிங்கள மொழிமூல கலவன் பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையில் 2700 மாணவர்களுக்கு 72 ஆசிரியர்கள் கல்வி பயிற்றுவித்துள்ளதாக இப் பாடசாலையின் பழைய மாணவி ஒருவர் தெரிவித்திருந்தார்.
சிங்கள பாடசாலை இல்லாத ஒரு மாவட்டமாக இருந்துவந்த மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்கள பாடசாலை ஒன்றை மீண்டும் திறந்துவைத்துள்ளதுடன், இலங்கையின் 25 மாவட்டத்திலும் தமது தாய் மொழியில் கல்வி கற்க கூடிய சந்தர்ப்பத்தை நாம் இன்று ஏற்படுத்தியுள்ளதை நினைத்து மகிழ்வடைகின்றோம், என இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில் கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா ஜகம்பத் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் அங்கு கருத்து தெரிவிக்கையில், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் வேறு இடங்களுக்கு சென்றிருந்தார்கள். அவர்கள் தற்போது மீள குடியேறினாலும் தமது தாய் மொழியில் படிப்பதற்கு பாடசாலை இல்லாமல் இருந்து வருவதை உணர்ந்து, இம் மாவட்டத்தின் கல்வி அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் நாம் இந்த குறையை நிவர்த்தி செய்துள்ளோம், மேலும் இப்பாடசாலைக்கான வளங்களை நாம் ஏற்படுத்திக்கொடுப்போம் என தெரிவித்திருந்தார்.
மீள் புனரமைப்பு செய்யப்பட்ட பாடசாலைக்கான நினைவுப்படிவம் திரைநீக்கம் செய்யப்பட்டு வைபவ ரீதியாக நாடா வெட்டியும், திறந்து வைக்கப்பட்டதுடன், ஆளுநரின் கரங்களால் புதிய மாணவர்கள் சேர்வு இடாப்பில் பதிவு செய்யப்பட்டு பாடசாலைக்கு இணைக்கப்பட்டார்கள்.
இந்நிகழ்வில், மதத்தலைவர்கள், கிழக்கு மாகாண கல்வி பணிமனையின் உயரதிகாரிகள், வலயக்கல்வி அலுவலகத்தின் பிரதிக்கல்வி பணிப்பாளர்கள், கோட்டக்கல்வி பணிப்பாளர்கள், உதவிக்கல்வி பணிப்பாளர்கள், பொறியியலாளர்கள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்