மட்டக்களப்பு-ஓசானம் நிலையத்தில் விசேட தேவையுடைய பிள்ளைகள் துன்புறுத்தப்படுகிறார்களா?

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பகுதியில் அமைந்துள்ள விசேட தேவைகளுள்ள சிறப்புக் குழந்தைகளுக்கான ஓசானம் நிலையத்தில் விசேட தேவையுடைய குழந்தைகளின் கை மற்றும் கால்களை கட்டி வைத்திருப்பது போன்ற காணொளி நேற்று முன்தினம் புதன்கிழமை சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் நடவடிக்கை எடுத்ததாகவும் சமூக வலைத்தளங்களில் பதிவுகள் இடப்பட்டிருந்தது.

இதேவேளை இக்காணொளி தொடர்பில் சட்டத்தரணி ஒருவர் தெரிவிக்கையில் இவ்வாறு விசேட தேவையுடைய ஒரு பிள்ளையை கயிற்றால் கட்டி வைப்பது தண்டணைக்குரியது என்றும், இவ்வாறு கயிற்றால் கட்டி வைக்கும் போது அவர்களின் இரத்தஓட்டம் சீராக நடக்காது என்றும் தெரிவித்தார்.

மேலும், இக்குழந்தைகள் விசேட தேவையுடையவர்களே ஒழிய மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல, இப்பிள்ளைகள் தங்கள் உடல் உறுப்புகளால் எதனையும் செய்ய முடியாது இருக்கிறார்களே தவிர, மனநலம் பாதிக்கப்பட்டு இல்லை, இப்படியான ஒரு நிலையில் இவ்வாறான சிறுவர்களை கயிற்றால் கட்டி வைக்க என்ன அவசியம், என சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் மின்னல்24 செய்திகள் நிறுவனத்திலிருந்து ஓசானம் நிலையத்தின் நிர்வாக பொறுப்பதிகாரியிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, இவ்வாறான ஒரு சம்பவம் ஓசானம் நிலையத்தில் நடந்ததாக தனக்கு தெரியவில்லை என்றும், எனினும் அந்த காணொளியில் இருக்கும் பிள்ளைகள் தமது நிலையத்தில் உள்ளவர்கள் தான் என்றும் பதிலளித்திருந்திருந்தார்.

அத்துடன்,  இச்சம்பவம் குறித்து ஓசானம் நிலையத்தில் முன்னர் பணியாற்றிய சிலரிடம் நாம் விசாரித்த போது கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஓசானம் நிலையத்தின் நிர்வாகத்தில் மாற்றம் ஏற்பட்டதாகவும் அதன் பின் அங்குள்ள விசேட தேவையுடைய குழந்தைகள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை எனவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

குறித்த ஓசானம் நிலையத்திலிருக்கும் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு அங்கு உண்மையாகவே என்ன நடக்கிறது என்பது தொடர்பில் கண்காணிக்கப்பட்டு வருகின்ற நிலையில் உண்மையான நிலவரம் தொடர்பான விடயங்கள் விரைவில் வெளியிடப்படும்.