மட்டக்களப்பு ஆயித்தியமலையில் புதிதாக திறக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு வவுனதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆயித்தியமலை பிரதேசத்தில் புதிதாக மதுபானசாலை ஒன்றினை ஆரம்பிப்பதனை கண்டித்து பிரதேச மக்களினால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டம் வவுனதீவு பிரதேச செயலகம் முன்பாக இன்று வியாழக்கிழமை காலை 9 மணிக்கு இடம்பெற்றது.

வவுனதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் 4 மதுபானசாலைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், முதலாவது மதுபானசாலை காஞ்சரங்குடாவில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது மதுபானசாலை ஆயித்தியமலையில் திறப்பதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், ஆயித்தியமலையில் குறித்த மதுபானசாலையை திறக்ககூடாது என தெரிவித்து, அப்பிரதேச மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்ததோடு இது தொடர்பான மகஜர் ஒன்றையும் பிரதேச செயலாளரிடம் கையளித்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் இராசதுரை குணாநிதி மண்முனை மேற்கு விவசாயிகள் அபிவிருத்தி சம்மேளன தலைவர், அருளானந்தா ராஜாரமேஸ் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் விவசாய சமூக ஸ்தாபகர், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்