மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் மகா வித்தியாலய மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு!
-மட்டக்களப்பு நிருபர்-
மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் மகா வித்தியாலய மாணவர்களில் மாகாண மட்டத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்று தேசிய ரீதியில் இடம்பெறவுள்ள மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி நிகழ்வில் பங்கு பற்றவுள்ள பாடசாலை மாணவர்களையும் மாணவர்களுக்கு பயிற்றுவித்த உடல்கல்வி ஆசிரியர்களையும் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை பாடசாலை நாகமணி மண்டபத்தில் இடம் பெற்றது
பாடசாலை அதிபர் வீ.முருகதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், போட்டியில் கலந்து கொள்ளவுள்ள மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வில் பிரதம அதிதியாக உடற்கல்வி உதவிக்கல்வி பணிப்பாளர் வி. லவக்குமார், வலயக் கல்வி அலுவலக கல்வி அதிகாரிகள், அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் மகா வித்தியாலய பிரதி அதிபர், பாடசாலை அபிவிருத்தி குழு செயலாளர், பாடசாலை பழைய மாணவர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.