மட்டக்களப்பில் வயதான காலத்தில் தனிமையில் வசித்த தம்பதியினருக்கு நேர்ந்த துயரம்!

மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தன்னாமுனை பகுதியில், முதியவர்களான கணவன்-மனைவி இருவரும் விஷம் அருந்தி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு சுமார் 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது.

தன்னாமுனை இராசையா வீதியை சேர்ந்த, அன்டனி சில்வெஸ்டர் (வயது 74) மற்றும் அவரது மனைவி மேரி ஜெர்மைன் (வ6யது 73) ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக, அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்ததையடுத்து, பொலிஸார் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி சம்பவ இடத்திற்கு சென்று ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுத்தனர்.

பின்னர், சடலங்கள் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இவ்வாறு உயிரிழந்த தம்பதியினர், மூன்று பெண்பிள்ளைகளின் தாய்,தந்தை என தெரிவிக்கப்படுகின்றது. பிள்ளைகள் திருமணம் முடித்து சென்றதும், கணவன் மனைவி இருவரும் தனிமையில் வசிந்து வந்த நிலையில் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, அயலவர்கள் தெரிவிக்கினறனர்.

உயிரிழந்த மூதாட்டி உடல்நலக் குறைவால் கடந்த ஒரு வருடமாக படுக்கையில் இருந்ததாகவும், மனைவியின் உடல்நலம் குறித்த யோசனையில் கணவரும் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸ் பிரிவின் பெரும் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்