மட்டக்களப்பில் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு

கல்வி பொது தராதர உயர் தரம் மற்றும் தரம் ஒன்று தொடக்கம் 11 ஆம் தரம் வரை கல்வி கற்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் மூலம் வழங்கப்படும் புலமைப்பரிசில் உதவித் தொகை வழங்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணியளவில் மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான்,  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார், இராஜாங்க அமைச்சர்களான சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் சதாசிவம் வியாழேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கல்வித் திணைக்கள அதிகாரிகள், மாவட்ட செயலக அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

க.பொ.த உயர் தர மாணவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 6000 ரூபா வீதம் 24 மாதங்களுக்கு வழங்கப்படவிருப்பதோடு,  ஒரு கல்வி வலயத்திலிருந்து 60 மாணவர்களைத் தெரிவு செய்து 6,000 மாணவர்களுக்கு புலமைப் பரிசில்கள் வழங்கப்படுகின்றது.

முதலாம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை உள்ள நாட்டின் 10,126 பாடசாலைகளையும் உள்ளடக்கும் வகையில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான 12 மாதங்களுக்கு மாதாந்தம் 3000 ரூபா வீதம் உதவித் தொகை வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்