
இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் கட்சி ஒருங்கிணைப்பாளரான ஆசிரியர் ஒருவர் பாடசாலை மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இவரை கைது செய்யுமாறு ஜனாதிபதி செயலகம் அறிவுறுத்தியுள்ள நிலையிலும் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை. இவ்விடயம் குறித்து கல்வி அமைச்சரின் நிலைப்பாடு என்னவென இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் இரா . சாணக்கியன் மேலும் உரையாற்றுகையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரபல பாடசாலையில் கல்வி பயிலும் மாணவிக்கு அந்த பாடசாலையின் ஆசிரியரான கோபிநாத் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இந்த மாணவி ஜனாதிபதிக்கு இவ்விடயத்தை அறிவித்துள்ளார். இந்த நபரை உடனடியாக கைது செய்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு கடந்த 12 ஆம் திகதி ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
இருப்பினும் இந்த ஆசிரியரை பொலிஸார் இன்றுவரை கைது செய்யவில்லை. தனது சட்டத்தரணி ஊடாக அவர் நீதிமன்றில் முன்னிலையாவார் என்று பொலிஸார் குறிப்பிடுகின்றனர். பொலிஸாரின் கடமை இதுவல்ல, கோபிநாத் என்ற இந்த ஆசிரியர் தான் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் கட்சி ஒருங்கிணைப்பாளர் என்று பகிரங்கமாக கூறுகின்றார்.
இந்த மாணவியிடம் ‘நான் குறிப்பிடுவதை போல் இருக்காவிடின் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும்’ என்று இந்த ஆசிரியர் மிரட்டியுள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதியிடம் முறையிட்டும் பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்படவில்லை. இது தேசிய பாடசாலை. ஆகவே இந்த பிரச்சினைக்கு கல்வி அமைச்சரின் பதிலை எதிர்பார்த்துள்ளேன் என தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த,
சபாநாயகரே குறித்த பாராளுமன்ற உறுப்பினரிடம் நான் தகவல்களை கேட்டுள்ளேன்.கல்வி அமைச்சு ஊடாக தலையிட்டு, உடனடியாக சட்டத்தை செயற்படுத்துமாறு குறித்த சிரேஷ்ட பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்துகிறேன் என தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவி ஒருவரை தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் உறுப்பினரும் குறித்த பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியருமான கோபிநாத் என்பவர் பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயன்றதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவிடப்பட்டு வந்தன.
மேலும் இவ்விடயம் தொடர்பில் குறித்த பாடசாலையின் அதிபரின் பெயரில் இருக்கும் ஒரு முகநூல் பக்கத்தில் பதிவொன்றும் இடப்பட்டிருந்தது.
இவ்விடயம் தொடர்பில் குறித்த பாடசாலையின் அதிபரை எமது செய்தி சேவை தொடர்பு கொண்டு வினவிய போது அவர் இவ்விடயம் தொடர்பில் ஊடகங்களிடம் எவ்வித தகவல்களையும் வெளியிட விரும்பவில்லை.
இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆசிரியர் தலைமறைவாகியுள்ளதாகவும் அவர் தேடப்பட்டு வருவதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
