மட்டக்களப்பில் பிரதான வீதியோரத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் தொடர்பில் வெளிவந்துள்ள தகவல்!

 

மட்டக்களப்பு அரசடியில் அமைந்துள்ள விளம்பர பலகை கம்பத்தில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலையில் சடலமாக மீட்கப்பட்டார்

அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு 7ம் பிரிவு சமுர்த்தி வீதியைச் சேர்ந்த முகுந்தன் சந்தோஷ் (வயது 22) என்பவரே இவ்வாறு இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார்

 

குறித்த இளைஞன் கொழும்பில் வேலை செய்து வரும் நிலையில்,  சம்பவ தினமான நேற்று வியாழக்கிழமை கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு, அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த இரு இளைஞர்களுடன் பயணித்துள்ளார்.

பேருந்து மட்டக்களப்பை அடைந்த போது, குறித்த இளைஞன் நள்ளிரவு வேளையில் மட்டக்களப்பில் இறங்கியுள்ளார்.

பின்னர், இளைஞன் அங்கிருந்த வர்த்தக நிலையம் ஒன்றுக்கு சென்று,  அங்கு கடமையாற்றும் ஒருவரின் கையடக்க தொலைபேசியை வாங்கி தனது தாயாருக்கு அழைப்பை மேற்கொண்டுள்ளார்.

அதன் பின்னர், குறித்த வர்த்தக நிலையம் இரவு 12.00 மணியளவில் மூடப்பட்டு, அங்கிருந்தவர்கள் தமது வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை காலையில் 6.00 மணிக்கு குறித்த வர்த்தக நிலைய கட்டிட தொகுதியில் நிர்மானிக்கப்பட்ட இருந்து விளம்பர பலகை கம்பியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் குறித்த இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்துக்கு தடவியல் பிரிவு பொலிசார் வரவழைக்கப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நசீர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு, சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டார்

குறித்த இளைஞர், அக்கரைப்பற்று நீதிமன்ற கட்டிடத்திற்கு தீயிட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு, நீதிமன்ற பிணையில் வெளிவந்தவர், என பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.