மட்டக்களப்பில் கரிநாள் பேரணியை தடுக்க பொலிஸார் குவிப்பு

 

இந்த நாட்டில் பெரும்பான்மை சமுகத்திற்கே சுதந்திரம் கிடைத்துள்ளதே தவிர தமிழ் பேசும் மக்களுக்கு அது கிடைக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் ஞாயிற்று கிழமைமை கரிநாளாக பிரகடனபடுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்று மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

இலங்கையில் இன்றைய தினம் 76ஆவது சுதந்திர தினம் என்று கூறி கோலாகலமாக நாடு பூராகவும் கொண்டாடப்படுகின்றது. உண்மையிலேயே இது 76 ஆவது கரி நாளாக தான் தமிழர் தரப்பு இந்த நாளை பார்க்கிறது. அதற்கு பிரதானமான காரணம் இந்த நாடு சுதந்திரம் அடைந்தாலும் பெரும்பான்மையினர் மாத்திரமே இதனை முழுமையாக அடைந்துள்ளனர் மாறாக தமிழர்களுக்கு இன்னும் அது வழங்கப்படவில்லை.

இதனை சர்வதேச சமுகம் மற்றும் இலங்கையில் வாழும் பெரும்பான்மையின மக்களின் தலைவர்களுக்கும் தெரியபடுத்தவே நாங்கள் இன்று இந்த நாளை கரிநாளாக பிரகடனபடுத்தி கல்லடி பாலத்திலிருந்து காந்தி பூங்கா வரையிலும் பேரணி ஒன்றை ஒழுங்கு செய்திருந்தோம்.

எனினும் இதனை தடுக்கும் வகையில் பொலிஸார் 17 பேருக்கு எதிராக நீதி மன்ற தடை உத்தரவை பெற்றிருந்தனர். இதில் வெபர் மைதானம் மற்றும் காந்தி பூங்காவில் இடம்பெறும் அரசாங்க நிகழ்வுகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இன்று காலை பொலிஸார் குறித்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகும் இடத்திற்கு வந்து பொலிஸ் உத்தரவை மீறி நீங்கள் பேரணியாக சென்றால் உங்களை கைது செய்வதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தாக அவர் மேலும் கூறினார்.

இந்த ஆர்பாட்டத்தில் மட்டக்களப்பில் உள்ள மத தலைவர்கள், சிவில் சமுக ஏற்பாட்டாளர்கள், காணாமல் ஆக்கபட்டோரி சங்கம், பல்கலைகழக மாணவர்கள் கால் நடை சங்க உறுப்பினர்கள் அரசியல்வாதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.