
மட்டக்களப்பில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரி இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்
வேலிகளாக இருக்கின்றவர்கள் பயிரை மேய்வது போல மக்களை பாதுகாக்கவேண்டியவர்களே அவர்களை கொலை செய்து குவிப்பதாகவும் அவர்கள் அதிகாரம் என்கின்ற இரும்பு இறக்கைகள் மூலம் பாதுகாக்கப்படுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று ஞாயிற்று கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சுதந்திரம் கிடைத்து 76 ஆண்டுகள் கடந்திருக்கிறது யுத்தம் முடிந்து 15 ஆண்டுகள் கடந்திருக்கின்றது குண்டுவெடிப்பு தாக்கதல் இடம்பெற்று 5 ஆண்டுகள் கடந்திருக்கின்றது எனினும் இது வரையிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை, இனிமேலாவது இந்த அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்தி குற்றவாளிகளுக்குரிய தண்டனையை வழங்குமாறு கேட்டு கொண்டார்.
ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று 5 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இன்று வரை இதன் சூத்திரதாரிகளுக்கு தண்டனை வழங்கப்படவில்லை என தெரிவித்தும் முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரியும் இந்த ஆர்பாட்டம் இடம்பெற்றது.
இதன்போது ஆர்ப்பாட்டகாரர்கள் கொலை செய்தவர்களும் விளக்கேற்றுகிறார்கள், 5 வருடம் கடந்தும் நீதி இல்லையா, அரசே கொலையாளியை மறைக்காதே, யாரை காப்பாற்றுவதற்காக இந்த மௌனம் போன்ற கோசங்களை எழுப்பியவாறும் பல்வேறு வாசகங்களை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன், முன்னாள் முதல்வர் தியாகராஜா சரவணபவன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன், சிவில் சமூக செயற்பாட்டாளர் சீலன், மற்றும் ஏனைய பொது அமைப்புக்களை சேர்ந்த உறுப்பினர்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்



