மட்டக்களப்பில் பரபரப்பு : 98 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி-வீடியோ இணைப்பு –
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட மூன்று பாடசாலையில் மாணவர்களுக்காக இன்று புதன்கிழமை நண்பகல் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக இதுவரை 98 மாணவர்களும் இரண்டு ஆசிரியர்களும் சுகவீனமுற்ற நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மாணவர்கள் பாடசாலை இடைவேளை நேரத்தில் பாடசாலையில் வழங்கப்பட்ட புட்டு உள்ளிட்ட உணவுகளை உற்கொண்ட போதே சுகயீனமுற்றுள்ளனர்.
கல்லடி விநாயகர் வித்தியாலயம், கோட்டமுனை கனிஸ்ட வித்தியாலயம் மற்றும் சென் மேரீஸ் பாடசாலை உள்ளிட்ட மூன்று பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களே உணவு ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மாணவர்களில் பலர் மயக்கமுற்ற நிலையிலும் ஏனையவர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றோட்டம் ஏற்பட்டதன் காரணமாக பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அயலவர்களின் உதவியுடன் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளும் மட்டக்களப்பு தலைமையக பொலிசாரும், காத்தான்குடி பொலிசாரும் இணைந்து பாடசாலைக்குச் சென்று உணவு மாதிரிகளை பரிசோதித்து வருகின்றனர்.
இச்சம்பவம் மட்டக்களப்பு நகர் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும் – Batticaloa News 24