
மத்திய மலைநாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக மகாவலி ஆறு நிரம்பி வழிவதால், சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு – நீலபொல வீதி மீண்டும் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்துள்ளது.
மகாவலி ஆற்றின் நீர்மட்டம் சடுதியாக அதிகரித்துள்ளதால், நீலபொல ஊடாகச் செல்லும் மகாவலி பாதுகாப்பு அணையின் மேலாக வெள்ள நீர் மேவிப் பாய்கிறது. இதன் காரணமாக குறித்த வீதி பாரியளவில் அரிக்கப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மாவிலாறு நீர்த்தேக்கம் பெருக்கெடுத்த போது இப்பகுதி சேதமடைந்திருந்த நிலையில், இராணுவத்தினரால் தற்காலிகமாகச் சீரமைக்கப்பட்டிருந்தது.
எனினும், தற்போதைய வெள்ளப்பெருக்கு காரணமாக அந்த தற்காலிக சீரமைப்புகளும் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
குறிப்பாக, இந்த வீதியின் ஊடாகவே மூதூர், தோப்பூர் மற்றும் நீலபொல ஆகிய பிரதேசங்களுக்கு குடிநீர் வழங்கும் பிரதான விநியோகக் குழாய்கள் செல்கின்றன.
வீதி சேதமடைந்துள்ளதோடு, நீர்க்குழாய்களும் பாதிக்கப்பட்டுள்ளதால் இப்பகுதிகளுக்கான குடிநீர் விநியோகம் முற்றாகத் தடைப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தற்போது மகாவலி ஆற்றில் நீர்வரத்து அதிகமாகக் காணப்படுவதால், சீரமைப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள முடியாதுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெள்ள நீர் வடிந்த பின்னரே சேதமடைந்த நீலபொல பாதுகாப்பு அணை மற்றும் நீலபொல – தெஹிவத்த வீதியை முழுமையாகச் சீரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும், என அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
குறித்த வீதியைப் பயன்படுத்தும் மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
