போர் கைதிகள் பரிமாற்றம் தொடர்பில் உக்ரைன் ஜனாதிபதி கருத்து
ரஷ்யாவுடன் கைதிகள் பரிமாற்றத்துக்கான பணிகள் நடந்து வருவதாகவும் போர் கைதிகளை திரும்ப பெறுவதற்கான பல பேச்சுவார்த்தைகள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளும் முயற்சிகள் நடந்து வருவதாகவும் உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இதனை உறுதிப்படுத்தும் வகையில், துருக்கி மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் மத்தியஸ்த பேச்சுவார்த்தையின் உதவியுடன் ஆலோசனைகள் நடந்து வருகின்றன என உக்ரைனின் தேச பாதுகாப்பு மற்றும் இராணுவ கவுன்சிலின் செயலாளர் ரஸ்டெம் உமரோவ் கூறியுள்ளார்.
இதேநேரம் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் போர் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் ஏற்படுத்த இருதரப்பினரும் அனுமதி அளித்துள்ளனர் எனவும் உக்ரைன் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார் .
இதன் அடிப்படையில், ஆயிரத்து 200 உக்ரைனியர்கள் விடுவிக்கப்படுவார்கள் எனவும் உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
