
போதைப்பொருள் பாவனைக்கு நாளொன்றுக்கு ஐம்பதாயிரம் தேவை : மாணவன் செய்த செயல்
மாத்தறை பிரதான பாடசாலை ஒன்றில் பதினொன்றாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் ஐஸ் போதைப்பொருள் பாவித்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாத்தறை பொல்ஹேன பிரதேசத்தில் வசிக்கும் பதினாறு வயதுடைய மாணவர் ஒருவரே நேற்று வெள்ளிக்கிழமை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட போது அவரிடம் இருந்து 60 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில், குறித்த மாணவன், கொச்சிக்கடையில் பேஸ்புக் மூலம் அறிமுகமான சப்ரான் என்ற நண்பருடன் ஆறு மாதங்களுக்கு முன்னர் முதல் முறையாக போதைப்பொருள் உட்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஐஸ் போதைப்பொருள் பாவனைக்கு நாளொன்றுக்கு சுமார் ஐம்பதாயிரம் ரூபா தேவைப்படுவதாகவும், அதற்கான பணத்தைத் தேடுவதற்காக புகைப்படக் கலைஞரான தனது தந்தையின் கமெராவை எடுத்து நகர் பகுதிகள் மற்றும் கடற்கரையில் சுற்றி திரிந்து காதலர்கள் மற்றும் மக்களைப் படம்பிடித்து கொடுத்து பணம் பெற்றதாக குறித்த மாணவர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
