போதைப்பொருள் கடத்தல், மனிதக் கடத்தல் மற்றும் பணமோசடி உள்ளிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய வெளிநாட்டினருக்கு அமெரிக்காவின் நிரந்தர குடியிருப்பு அனுமதியான ‘கிரீன் கார்டு’ வழங்கப்படுவதைத் தடுக்கும் வகையில் புதிய வழிகாட்டுதல்களை அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) வெளியிட்டுள்ளன. இந்த புதிய கொள்கை வழிகாட்டுதல்கள் செப்டெம்பர் 23ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளன.
அமெரிக்க குடிவரவு மற்றும் தேசிய சட்டத்தின் கீழ், கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருள் கடத்தல், குறிப்பிடத்தக்க மனிதக் கடத்தல் மற்றும் பணமோசடி ஆகியவை குடிவரவு தகுதியின்மைக்கான காரணங்களாக கருதப்படுகின்றன. இவ்வாறான காரணங்களின் அடிப்படையில் தகுதியற்றவர்கள் என தீர்மானிக்கப்படுவோருக்கு பொதுவாக அமெரிக்க விசா, நாட்டுக்குள் நுழைவு அல்லது நிரந்தர குடியிருப்பு அந்தஸ்தை பெறுவதில் தடைகள் ஏற்படும். எனினும், குறிப்பிட்ட சில விலக்குகள் அல்லது சட்டரீதியான தள்ளுபடிகளுக்கு அவர்கள் தகுதி பெறக்கூடும் என USCIS தெரிவித்துள்ளது.
மேலும், போதைப்பொருள் அல்லது மனிதக் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கருதப்படும் ஒருவரின் மனைவி, மகன் அல்லது மகள் பெற்ற நிதி அல்லது பிற நன்மைகளையும் சில குடிவரவு விண்ணப்பங்களை பரிசீலிக்கும் போது அதிகாரிகள் கருத்தில் கொள்ள முடியும் என புதிய வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் செப்டெம்பர் 23ஆம் திகதி நிலுவையில் இருந்த அல்லது அதற்குப் பின்னர் தாக்கல் செய்யப்பட்ட தொடர்புடைய குடிவரவு நலன் கோரும் விண்ணப்பங்களுக்கும் பொருந்தும்.









