பாடசாலைகளில் புதிய தவணை தொடங்கியதையடுத்து, பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் பொலிஸ் வாகனத்தில் பாடசாலை சென்ற சம்பவம் பதிவாகியுள்ளது.
தித்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட, கொத்மலை-கம்பளை பிரதான வீதியின் பனங்கம்மன (Panangammana) பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் காரணமாக, அந்த வீதியில் போக்குவரத்து முற்றிலும் தடை பட்டுள்ளது.
இதன் விளைவாக, பேருந்து இல்லாததால், பனங்கம்மன பகுதியிலிருந்து கொத்மலை புதுநகரில் உள்ள காமினி திசநாயக்க பாடசாலைக்கு வரும் மாணவர்களும், ஆசிரியர்களும் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்து 2 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு, கொத்மலை பொலிஸ் பொறுப்பதிகாரி, ஆய்வாளர் இந்திகா லலித் மற்றும் பிற பொலிஸ் அதிகாரிகள், தங்களது இரண்டு பொலிஸ் வாகனங்களை பயன்படுத்தி, நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்து மாணவர்களையும், ஆசிரியர்களையும் பொலிஸ் வாகனத்தில் பாடசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்திருந்தனர்.
வீதி சேதமடைந்துள்ளதால், அப்பகுதி மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் தற்காலிக மரக்கட்டைகளைப் பயன்படுத்தி மிகவும் ஆபத்தான முறையில் இப்பகுதியைக் கடந்து வருகின்றனர்.










