“பொத்துவில் பகுதியில் தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கும் இனவாதிகள்” : மக்கள் விசனம்

அம்பாறை பொத்துவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கனகர் கிராமம் பகுதியில் உள்ள மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

தமது காணிகளை தமக்கு திருப்பி தருமாறு கோரி இவ்வார்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்திருந்தனர்.

குறித்த மக்களின் பிரச்சினை தொடர்பில் ஈரோஸ் அமைப்பின் செயலாளர் நாயகம் இராஜநாயகம் பிரபாகரன் எமது செய்திச்சேவைக்கு தெரிவிக்கையில்,

பொத்துவில் பிரதேச செயலக்திற்குட்பட்ட பகுதியில் இருக்கும் இந்த கனகர் கிராமத்தில் 1990 ஆம் ஆண்டிற்கு முன்னர் சுமார் 300 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருந்தன. இங்கு அவர்கள் சேனைப்பயிர் செய்கை கால்நடைவளர்ப்பு போன்ற வாழ்வாதாரங்களை முன்னெடுத்து இருந்தனர்.

இந்நிலையில் 1990 ஆண்டு இலங்கை இராணுவம் மற்றும் விடுதலை புலிகள் அமைப்பிற்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இக்கிராம மக்கள் தமது காணிகளை விட்டு இடம்பெயர்ந்தனர்.

இதன்பின் வடக்கு கிழக்கில் யுத்தம் நிறைவிற்கு வந்த பின் இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர்.

எனினும் இந்த கனகர் கிராம மக்கள் மாத்திரம் இன்னும் மீள்குடியேற்றப்படவில்லை. பொத்துவில் பிரதேசத்தில் உள்ள சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் பொத்துவில் பிரதேச செயலாளரும் இணைந்து கனகர் பகுதியில் உள்ள காணிகளை வனப்பரிபாலன திணைக்களத்திற்கு வழங்கியுள்ளனர்.

அதற்கு காரணம் குறித்த கனகர் கிராம பகுதியானது கடற்கரையை அண்டிய சுற்றுலாப்பகுதியாக காணப்படுகின்றது.

அதன்பின் இம்மக்கள் என்னிடம் முறையிட்டதை தொடர்ந்து நான் பல வழிகளை மேற்கொண்டு இந்த காணிகளை அம்மக்களுக்கு பெற்றுக்கொடுத்தேன். ஒரு குடும்பத்திற்கு இரண்டு ஏக்கர் வீதம் இந்த காணிகள் இம்மக்களுக்கு வழங்கப்பட்டது அரசாங்கத்தினால். அத்துடன் அவர்களை மீள்குடியேற்றும் நடவடிக்கையை முன்னெடுக்குமாறும் பணிக்கப்பட்டது.

எனினும் தற்போது குறித்த பிரதேச செயலாளர் கடற்கரையை அண்டிய பகுதியில் காணிகளை அளந்து வனவள திணைக்களத்திற்கு வழங்கி விட்டு ஒரு குடும்பத்திற்கு 1 ஏக்கரும் 4 பரப்பும் காணி வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த மக்களின் சொந்த காணிகளை கூறுபோட இந்த இனத்துவேசிகள் யார்? இவர்களின் இனத்துவேச நடவடிக்கைகளுக்கு சில அடிவருடிகளான அம்பாறை மாவட்ட கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசன் போன்றோர் துணையாக இருக்கிறார்கள் இதனால் இன்று இம்மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர் என தெரிவித்தார்.