பேருந்து பயணக் கட்டணம் குறைக்கப்படவில்லை: மக்கள் விசனம்
குறைக்கப்பட்ட டீசல் கட்டணத்துக்கு ஏற்ப பேருந்து பயணக் கட்டணம் குறைக்கப்படவில்லை என பயணிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
கடந்த செப்டெம்பர் மாதத்திலிருந்து இதுவரையான காலப்பகுதிக்குள் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 34 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. எனினும் அதன் பயனை தங்களுக்குப் பெற்றுத் தருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என பயணிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
எரிபொருள் விலை சூத்திரத்துக்கு அமையக் கடந்த செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 307 ரூபாவாக காணப்பட்ட ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 283 ரூபாவாக குறைக்கப்பட்டது.
இதனையடுத்து நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பேருந்து பயணக் கட்டணம் 4.24 சதவீதத்தால் குறைக்கப்பட்டது.
இதன்படி, ஆரம்ப பேருந்து பயணக் கட்டணம் 28 ரூபாவிலிருந்து 27 ரூபாவாக குறைக்கப்பட்டது. எனினும் பேருந்து கட்டணம் குறைக்கப்பட்ட அளவு போதுமானதாக இல்லை என பயணிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
பெரும்பாலான பேருந்துகளில் ஆரம்ப பயணக் கட்டணத்துக்கு ஏற்ப சரியான வகையில் மிகுதி பணம் வழங்கப்படுவதில்லை எனவும் பயணிகள் குறிப்பிடுகின்றனர்.