
பேருந்தில் அனுப்பப்பட்ட பொதிக்குள் போதைப்பொருள் : அக்கரைப்பற்றில் சம்பவம்!
அக்கரைப்பற்றில் வசிக்கும் நபர் ஒருவருக்கு, கொழும்பிலிருந்து தனியார் பேருந்தில் அனுப்பப்பட்ட சிசிரிவி அடங்கிய பொதியில், 34 கிராம் ஜஸ் போதை பொருள் இருந்ததையடுத்து, குறித்த பொதியை பெற வந்த 20 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
கொழும்பு-அக்கரைப்பற்று இடையிலான போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து ஒன்றில், கொழும்பில் வைத்து பொதி ஒன்று நபரொருவரால் வழங்கப்பட்டு, குறித்த பொதியில் ஒரு தொலைபேசி இலக்கம் எழுதப்பட்டுள்ளது அந்த தொலைபேசி இலக்கத்திற்கு உரியவர் அக்கரைப்பற்றில் வந்து பொதியை பெற்றுக்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடத்தல் சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து, அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் பகீரதன் தலைமையிலான குழுவினர், சம்பவ தினமான இன்று அதிகாலை 3 மணி தொடக்கம் நகர்பகுதியில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இதன்போது, சந்தேகத்திற்கிடமான பேருந்து கொழும்பிலிருந்து அக்கரைப்பற்றை வந்தடைந்தது.
அதனைத்தொடர்ந்து பொதியில் குறிப்பிடப்பட்டிருந்த தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொண்ட பேருந்து நடத்துனர், “நாங்கள் அக்கரைப்பற்றுக்கு வந்து விட்டோம் உங்களுக்கு ஒரு பார்சல் வந்திருக்கிறது வந்து அதனை பெற்றுக்கொள்ளுங்கள்” என தெரிவித்துள்ளார்.
சற்று நேரத்தில் பொதியை பெற்றுக்கொள்ள வந்த 20 வயது இளைஞன், பொதியை பேருந்து நடத்துனரிடமிருந்து பெற்றுக்கொண்ட போது, அங்கு மறைந்திருந்த பொலிஸார் இளைஞனை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
