பெண்கள் கட்டாயம் 3 முறை திருமணம் செய்ய வேண்டுமாம்!
இந்தியாவில் ஆந்திரா ஒடிஷா எல்லையில் வாழும் மாலிஸ் பழங்குடி மக்கள் தங்கள் இனத்தில் பிறந்த பெண் குழந்தைகளுக்கு மூன்று முறை திருமணம் செய்து வைக்கும் வினோத சடங்கை கடைப்பிடித்து வருகின்றனர்.
இவர்கள் தமது பெண் குழந்தைகளுக்கு ஐந்து வயது நிறைவடைவதற்கு முன்பாகவும், வயதுக்கு வந்த பிறகு ஒரு முறையும் மணமகன்கள் இல்லாமல் திருமணங்கள் செய்து வைக்கப்படும், ஆனால், அவை திருமணங்கள் என்றே சொல்லப்படுகிறது. மூன்றாவது முறையாக நடைபெறும் திருமணத்தில் மட்டுமே மணமகன் இருப்பார்.
கிராமத்தில் உள்ள அனைத்து பெண்களுக்கும் இந்த திருமணங்கள் செய்யப்படும்.
மாப்பிள்ளை இல்லாமல் நடக்கும் திருமணம் என்றாலும் கிராமம் முழுவதும் கொண்டாட்டமாக காணப்படும்.
இது தொடர்பில் அவர்கள் தெரிவிக்கும் போது
“இந்த திருமணங்கள் எங்களின் கொண்டாட்டங்கள்”
மாலிஸ் கிராம மக்கள் தாங்கள் பெண்களுக்கு மிகுந்த மரியாதையும், முக்கியத்துவமும் அளிப்பதாக கூறுகின்றனர்.
எங்கள் இனத்தில் பெண்கள் பிறந்தால் அதை கொண்டாடுவோம். பெண் குழந்தைகளை கடவுளாக கொண்டாடுவது எங்களின் பாரம்பரிய வழக்கம். எங்களின் வழக்கப்படி பெண்களுக்கான சடங்குகள் அவர்களின் பெற்றோர்களின் முன்னிலையிலும் பிற குடும்ப உறுப்பினர்களின் முன்னிலையிலும் செய்யப்படும்.
திருமணம் பெண்களின் வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. எனவேதான் எங்களின் முன்னோர்கள் இந்த சடங்கை செய்தனர். பின்னாளில் பெண்ணின் பெற்றோரோ அல்லது உறவினர்களோ உயிரோடு இல்லை என்றாலும் அவர்கள் ஏதோ ஒரு திருமணத்தையாவது பார்த்திருப்பார்கள்,” என்கிறார்
“இந்த பழங்குடி இனத்தில் நிஜமான திருமணமாக இருந்தாலும் சரி அல்லது சடங்குக்காக செய்யும் திருமணமாக இருந்தாலும் சரி இரண்டுமே விமர்சையாகதான் செய்யப்படுகிறது. உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் அழைக்கப்படுகின்றனர். பல வகையான உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. ஒட்டுமொத்த கிராமத்திற்கும் ஒரு இடத்தில் உணவு தயாரிக்கப்படும்.
திருமணங்களுக்கு விருந்தினர்கள் மூன்று நாட்களுக்கு முன்னதாகவே வந்துவிடுவர். புதுத்துணிகளை உடுத்திக் கொண்டு கிராமம் முழுவதும் சுற்றித் திரிவர். எங்களின் பாரம்பரிய முறைப்படி பூஜைகள் நடக்கும். ஒவ்வொரு திருமணத்திற்கும் ஒரு லட்ச ரூபாய் செலவு செய்யப்படும்,” என்கிறார் கிராமவாசி மனேம்மா.
ஐந்து வயது திருமணத்தை நடத்த ஊரின் பெரியோர்கள் ஒரு திகதியை முடிவு செய்கிறார்கள். கிராமத்தில் அனைவரும் ஒப்புக் கொண்டால் முகூர்த்தம் முடிவு செய்யப்படுகிறது. அப்போதிலிருந்து கொண்டாட்டம் தொடங்கிவிடும்.
இரண்டு திருமணங்களுக்கு பிறகு மூன்றாவதாக மணமகனுடன் செய்யும் திருமணத்தின்போது மாப்பிள்ளையை பெண்கள்தான் தேர்வு செய்கிறார்கள். அந்தப் பெண் யாரையாவது விரும்பினால் அவருடன் திருமணம் செய்து வைக்கப்படும். அல்லது பெரியோர்கள் சேர்ந்து ஒரு மணமகனை தேர்ந்தெடுப்பர்,
மாலிஸ் பழங்குடியினத்தில், ஏழை பணக்காரர்கள் என அனைத்துவிதமான மக்களும் உள்ளனர். ஆனால், அனைவரும் இந்த மூன்று திருமண சடங்கை செய்கின்றனர். ஏழை குடும்பம் என்றால் ஊர்கூடி உதவுகின்றனர். மளிகை சாமான்கள் மற்றும் அரிசிகளை வாங்கித்தருகிறார்கள். சிலர் பணமாகவும் பரிசுகளை வழங்குவார்கள். இதை இவர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.
திருமணங்கள் எவ்வாறு கொண்டாடப்படுகின்றன?
முதல் இரு திருமணங்களுக்கு பெண் குழந்தைகளை அலங்கரித்து மரப்பலகையில் அமர வைப்பர்.மூன்றாவது திருமணத்தில் சடங்குகள் முடிந்தவுடன் மாப்பிள்ளை வீட்டுக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்படுவர்.
திருமண தம்பதிகளுக்கு மாவிலை போன்ற பாஷின்கம் எனப்படும் ஆபரணம் நெற்றியில் கட்டப்படும். பெண்களின் தலையில் கீரிடம் இருக்கும். அலங்காரம் முடிந்தவுடன் அந்த பெண்ணை கிராமம் முழுவதும் தோளில் சுமந்து சுற்றுவர். அதன்பின் திருமணத்திற்காக ஏற்பாடு செய்து வைக்கப்பட்டிருந்த ஒரு பொது இடத்திற்கு அவர்களை அழைத்துவருவர். அங்கு அவர்கள் மூங்கிலால் செய்யப்பட்ட விரிப்பில் அமர வைக்கப்படுவர். அதன்பின் முறைப்படி ஹோமம் வளர்க்கப்படும். இந்த மூன்று திருமண சடங்கை செய்யவில்லை என்றால் மாலிஸ் கிராமத்தில் குற்றமாக கருதப்படும், என்கிறார் மாலிஸ் பழங்குடியின பூசாரி புரோஹித் கிருஷ்ணமூர்த்தி.
இம்மாதிரியான சடங்குகளை கடைப்பிடிக்கவில்லை என்றால் அது முன்னோர்களை அவமதிக்கும் செயல் என பழங்குடியின மக்கள் கருதுகிறார்கள் என்கிறார் ஆந்திரா பல்கலைக்கழகத்தை சேர்ந்த மானுடவியல் துறையின் ஓய்வுப் பெற்ற பேராசிரியர் திருமலா ராவ்.
மணமகன் இல்லாமல் செய்யப்படும் இரு திருமணங்கள் ஒரு நீண்டகால சடங்கு. அதேபோல, ஒரு பெண் ஒருவரை விரும்பினால் அவருடன் திருமணம் செய்து வைப்பதிலிருந்து இவர்களின் சிந்தனைகள் தெளிவாக உள்ளது என்பதை காட்டுகிறது.
அவர்கள் தங்களின் முன்னோர்களை அவமதிக்க விரும்பாமல் முதல் இரு திருமணங்களை செய்கின்றனர். இதன் மூலம் அவர்கள் தங்களின் பெரியோர்களுக்கு கடமையாற்றுவதாக அவர்கள் நினைக்கின்றனர். அதேபோல, பண உதவி வழங்குவது, பொருட்களை வழங்குவது போன்ற ‘க்ரவுட் ஃபண்டிங்’ முறைகள் ஒரு பழம்பெரும் சடங்காக உள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்