இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் 500,000 முதல் 10 மில்லியன் ரூபா வரையான வீடமைப்பு கடனை பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய “எதெர திரிய” (Ethera Diriya) வீடமைப்பு கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE), DFCC வங்கி மற்றும் யூனியன் வங்கியுடன் நேற்று வியாழக்கிழமை ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க ஆகியோரின் தலைமையில் இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.
வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர உள்ளிட்டோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இந்தத் திட்டத்தின் கீழ் மேலும் ஒன்பது வங்கிகளுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் திட்டத்தில் பங்கேற்கும் வங்கிகளின் எண்ணிக்கை 11 ஆக அதிகரிக்கும்.
தகுதியுடைய புலம்பெயர் தொழிலாளர்கள் பெற்றுக்கொள்ளும் கடன்களை அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை திருப்பிச் செலுத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்படும்.
குறிப்பாக, வீடமைப்பு தொடர்பான தேவைகளுக்காக, வீடுகளை நிர்மாணிப்பது உள்ளிட்ட பணிகளுக்கு இந்தக் கடன்களைப் பயன்படுத்த முடியும்.
வட்டியில் சலுகை
இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சமாக, தகுதியான கடன்களுக்கு வங்கிகள் அறவிடும் வட்டியின் ஒரு பகுதியை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், அங்கீகரிக்கப்பட்ட மீளளிப்பு முறையின் கீழ் வங்கிகளுக்கு மீளச் செலுத்தும்.
இதற்காக 2027ஆம் ஆண்டில் அரசாங்கம் 126 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் கணக்கில் கொள்ளப்படும் அதிகபட்ச வருடாந்த வட்டி வீதம் 15 சதவீதமாகும். ஒரு வங்கி 15 சதவீதத்துக்கும் அதிகமான வட்டி வீதத்தை அறவிட்டால், அந்த மேலதிக வட்டித் தொகையை கடன் பெறுபவரே செலுத்த வேண்டும்.
கடன் பெறுவதற்கான நடைமுறை
கடனுக்கான விண்ணப்பங்களை பங்கேற்கும் வங்கிகள் மூலமாகவே சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரரின் தகுதி, கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன், கடன் நம்பகத்தன்மை மற்றும் தேவையான பிணைகள் உள்ளிட்ட விடயங்களை வங்கிகள் தனிப்பட்ட முறையில் மதிப்பீடு செய்த பின்னரே கடனை வழங்குவது தொடர்பில் தீர்மானிக்கும்.
வங்கியினால் விண்ணப்பத்திற்கு ஆரம்ப அனுமதி வழங்கப்பட்ட பின்னர், விண்ணப்பதாரர்இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்துள்ளாரா, தற்போது வெளிநாட்டில் தொழில்புரிகிறாரா, வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புகிறாரா உள்ளிட்ட தகுதிகள் தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலதிகமாக சரிபார்ப்புகளை மேற்கொள்ளும்.
கடன்களை அனுமதிப்பது, வழங்குவது மற்றும் மீளப் பெறுவது ஆகிய பொறுப்புகள் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கே இருக்கும்.
அதேவேளை, அங்கீகரிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு அமைவாக தகுதியான வட்டி தொகையின் ஒரு பகுதியை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வங்கிகளுக்கு மீளச் செலுத்தும்.
ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒருமுறை, கடன் தவணை செலுத்தப்பட்டமை தொடர்பான தகவல்கள், வட்டி கணக்கீடுகள் மற்றும் மீளளிப்பு கோரிக்கைகளை வங்கிகள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
அவற்றை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் சரிபார்த்த பின்னர், அங்கீகரிக்கப்பட்ட மீளளிப்புத் தொகை சம்பந்தப்பட்ட கடன் கணக்குகளில் வரவு வைக்கப்படும்.
வெளிநாட்டில் பணிபுரிந்து ஈட்டும் வருமானத்தைப் பயன்படுத்தி தங்களது வீடமைப்புத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சலுகை அடிப்படையிலான நிதி வசதியை வழங்கும் நோக்கிலேயே இந்த “எதெர திரிய” வீடமைப்பு கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.










