
புத்தரின் மறு அவதாரம் என கூறப்பட்டவர் கைது
புத்தரின் மறு அவதாரம் என அழைக்கப்படும் சர்ச்சைக்குரிய நேபாள மதத்தலைவர் ராம் பஹதுர் போம்ஜன், பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
‘குட்டிப் புத்தர்’ என்று அழைக்கப்படும் ராம் பகதூர் போம்ஜன் என்ற மதத்தலைவரே சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில் பல வருடங்களாக தலைமறைவாக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான மதத்தலைவர் ராம் பஹதுர் போம்ஜனுக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் பக்தர்கள் உள்ளனர். அவர் பல மாதங்களாக தண்ணீர், உணவு இன்றி மரத்தின் அடியில் தியானம் செய்து மக்கள் மத்தியில் புகழ்பெற்றார்.
இதன் காரணமாக 2005 காலக்கட்டத்தில் இவர் தலைப்பு செய்திகளில் இடம் பெற்றார். இதையடுத்து அவருக்கான பக்தர்கள் அதிகரிக்க தொடங்கியது. போம்ஜானின் “புத்த பையன்” என்ற பெயர் அவரது புகழுக்கு மேலும் உதவியது, அவர் காட்டில் இருந்தபோது அவரைப் பார்க்க அயல் நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்தனர்.
போம்ஜன் தனது முதல் பிரசங்கத்தின் போது 3,000 பேரைக் கவர்ந்ததன் மூலம் பிரசங்கம் செய்ய ஆரம்பித்தார் என அவரது இணையதளம் தெரிவிக்கிறது.
இந்த நிலையில் காத்மண்டுவின் தெற்கே உள்ள பாரா மாவட்டத்தில் உள்ள அவரது ஆசிரமத்தில் சீடராக வசித்து வந்த “இளம் பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கில்” அவருக்கு எதிராக 2020 இல் கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் அவர் தலைமறைவானார்.
நேபாள பொலிஸாரின் மத்திய புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காத்மண்டுவின் புறநகர்ப் பகுதியில் வீடு ஒன்றில் வசித்து வந்த 34 வயதான குறித்த மதத்தலைவரை கண்காணித்து வந்த நிலையில், அவர் தப்பியோட முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைதானபோது அவரிடமிருந்து ஒரு தொகை கைத்தொலைபேசிகள், ஐந்து மடிக்கணினிகள் மற்றும் டேப்லெட்டுகள் மற்றும் 200,000 அமெரிக்க டொலருக்கும் அதிகமான நேபாளி மற்றும் வெளிநாட்டு நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் பல்வேறு காலங்களில் போம்ஜானின் ஆசிரமத்தில் இருந்து காணாமல் போன சீடர்கள் குறித்து மேலதிக விசாரணைகள் மற்றும் தேடல்கள் நடத்தப்படுகின்றன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2018 ஆம் ஆண்டில் 18 வயது கன்னியாஸ்திரி ஒருவரே அவர் மீது ஆசிரமத்தில் வைத்து தன்னை பலாத்காரம் செய்தாக முறைப்பாடு செய்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
