
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட எழுவான் பெருநிலப்பரப்பு மக்களும் படுவான் நிலப்பரப்பு மக்களும் இணையும் சந்தை தொகுதியாக களுவாஞ்சிகுடி சந்தை காணப்படுகிறது.
இங்கு மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனையும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்கு சொந்தமானதாக காணப்படும் களுவாஞ்சிக்குடி பொதுச் சந்தை பெயர் பலகை இல்லாத நிலையில் காணப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் கிழக்கு மாகாண ஆளுநர், அமைச்சர்கள் இணைந்து புதிய கடைத் தொகுதி ஒன்றினை அமைத்தனர். இது அமைக்கப்பட்டு மூன்று மாதங்கள் கூட பூர்த்தி செய்யப்படாத நிலையில் பீலிகளினால் நீர் வழிந்து ஓடி கடைத்தொகுதிக்குள் செல்வதாகவும் இது முறையான திட்டமிடல் வசதியின்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும், இக்கடைத் தொகுதியினை சரியான முறையில் மின்சாரம் இணைக்கப்படாமல் காணப்படுவதனால் அருகில் காணப்படுகின்ற கடைகளில் இருந்தே மின்சாரத்தினை பெற்று தமது வியாபாரத்தினை முன்னெடுப்பதாகவும் சில வியாபாரிகள் கவலை வெளியிடுகின்றனர்.
இங்கு காணப்படுகின்ற மேல்மாடி கடை தொகுதிகள் அனைத்தும் விங்குகளினதும் பறவைகளின் வாழிடமாக காணப்படுகிறது. பீலிகள் ஓடுகள் என்பன உடைந்து கவனிப்பார் அற்ற நிலையில் காணப்படுவதாக வியாபாரிகள் கவலை வெளியிடுகின்றனர். மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட சந்தை கடைத்தொகுதிகள் முறையாக பராமரிக்கப்பட வேண்டியது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கடமை அல்லவா.
இது தொடர்பில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை செயலாளரிடம் தொடர்பினை மேற்கொண்ட போது அவர் கூறுகையில்,
பிரச்சனைகள் அனைத்தும் இனங்காணப்பட்டதாகவும் பெயர் பலகை இரு வாரங்களுக்குள் பொறிக்கப்படுவதாகவும் தற்போது ஏற்பட்டுள்ள மழை வெள்ள நிலை காரணமாக அது சற்று மந்த கதையில் செயல்பட்டதாகவும் கூறினார்.
மேலும் மேல் மாடி கடைத் தொகுதிகள் ஏலம் குறைந்த விலையில் விடப்பட்டபோதும் அதனை பெறுவதற்கு வியாபாரிகள் இல்லாத காரணத்தினால் அது அவ்வாறு கவனிப்பாரற்ற நிலையில் காணப்படுவதாகவும் அதனை ஒழுங்கான முறையில் சீர் செய்து இன்னுமோர் இரு வாரங்களுக்குள் அதனை சுத்தப்படுத்தி அதற்குரிய நடவடிக்கையை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
புதிதாக அமைக்கப்பட்ட கடைத் தொகுதி பற்றி கூறுகையில்,
மின்சார இணைப்பினை பெறுவதற்கு இலங்கை மின்சார சபையிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதும், அவர்களின் தாமதத்தினால் அவ்வாறு காணப்படுவதாகவும், அதனையும் வெகு விரைவில் சரி செய்வதாகவும் அதற்கான அனைத்து வேலைகளும் நடைபெற்று வருவதாகவும் ஆட்சி மாற்றத்தின் எதிரொலியினால் இவ்வாறான துர்பாக்கியநிலை ஏற்பட்டதாகவும், அதனை சரியான முறையில் இன்னும் ஓர் இரு வாரங்களுக்குள் நிறை செய்து வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் ஏற்ற சூழலை உருவாக்குவதாகவும் பிரதேச சபை செயலாளர் சா. அறிவழகன் கருத்து தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்